World Cup 2023; Ind vs Pak World Cup Match In Danger? Tamil News 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்கிறது. இந்த தொடருக்கான போட்டிகள் நாக்பூர், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், இந்தூர், பெங்களூரு, அகமதாபாத், சென்னை மற்றும் தர்மஷாலா உள்ளிட்ட 12 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்த தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் பரம போட்டியாளராக வலம் வரும் இவ்விரு அணிகள் இந்திய மண்ணில் 2016ம் ஆண்டுக்குப் பிறகு நேருக்கு நேர் மோதும் போட்டி என்பதால், ஏராளமான ரசிகர்கள் திரள்வார்கள். இதேபோல், வெளிநாட்டில் இருந்தும் ரசிகர்கள் இந்தியாவுக்கு வருவார்கள். அதனால் 1 லட்சம் பேர் அமரும் திறன் கொண்ட நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முக்கிய போட்டியை நடத்த முடிவு செய்துள்ளது.
இலங்கையில் ஆசிய கோப்பை
இருப்பினும், இந்த உலக கோப்பை தொடருக்கு முன்னதாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) நடத்தும் ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் 2008 மும்பை பயகரவாத தாக்குதலுக்குப் பின், இந்திய அணி இதுவரை பாகிஸ்தான் செல்லவில்லை. அதனால், இம்முறையும் பாதுகாப்பு காரணகளுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் (பி.சி.சி.ஐ.,) ஜெய் ஷா கூறினார்.
ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பி.சி.பி.,) இந்திய பங்கேற்கும் போட்டிகளை மட்டும் வேறு இடத்தில் நடத்த ஆலோசனை தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த இந்தியா, 2018 (இந்தியா ), 2022 (இலங்கை ) என இரு தொடர்களும் மாற்றப்படு ஐக்கி அரபு எமிரேட்சில் நடத்தப்படன. எனவே, இம்முறையும் அந்த இடத்துக்கு மாற்ற வேண்டும் என பி.சி.சி.ஐ., உறுதியாக இருந்தது. அதற்கு இலங்கை வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் ஆதரவு தெரிவித்தும் இருந்தன.
இதனிடையே, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தானில் இருந்து மாற்றி இலங்கையில் நடந்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இலங்கை மண்ணில் தொடரை நடத்துவதற்கான நடவடிக்கையை ஆதரிக்கும் நிலையில், போட்டிக்கான இடம் குறித்த இறுதி முடிவு இந்த மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹைபிரிட் மாடல் பரிந்துரைக்கும் பாகிஸ்தான்
‘ஆசியா கோப்பைக்கு நடுநிலையான மைதானத்தை இந்தியா விரும்பினால், உலகக் கோப்பைக்கும் அதையே நாங்கள் விரும்புகிறோம்’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நஜாம் சேத்தி கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது தெளிவாகத் தெரியாத நிலையில், போட்டியை புறக்கணிக்கக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு பேட்டியளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் (பிசிபி) நஜாம் சேத்தி, ‘ஆசியா கோப்பைக்கு நடுநிலையான மைதானத்தை இந்தியா விரும்பினால், உலகக் கோப்பைக்கும் அதையே நாங்கள் விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளார். மேலும் ஆசிய கோப்பையை ஹைபிரிட் மாடலில் நடத்தலாம் என்றும், உலகக் கோப்பையை இந்தியாவில் அதே மாடலில் நடத்தலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஹைபிரிட் மாடல் என்றால் என்ன?
“பாகிஸ்தானுடன் விளையாட திட்டமிடப்பட்டுள்ள அனைத்து அணிகளும் (இந்தியாவைத் தவிர), பாகிஸ்தானில் நான்கு போட்டிகளில் விளையாடும். அதன் பிறகு, ஒரு விமானத்தில் ஏறி நடுநிலையான மைதானத்திற்குச் செல்லுவார்கள். அங்கு நாங்கள் மீதமுள்ள போட்டிகளை விளையாடுவோம். எல்லா பிரச்சனைகளையும் பார்த்துக்கொள்ளும் ஒரு அட்டவணையை நாங்கள் கொடுத்துள்ளோம், அதற்கு எந்த எதிர்ப்பும் இருக்கக்கூடாது.” என்று நஜாம் சேத்தி பரிந்துரைத்துள்ளார்.
இருப்பினும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராகவும், பிசிசிஐ செயலாளராகவும் இருந்து வரும் ஜெய் ஷா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த யோசனை செவிமடுப்பாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது. அவர் இந்த யோசனைக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், பாகிஸ்தான் ஆசிய கோப்பை மற்றும் ஒருநாள் உலக் கோப்பையில் பங்கேற்ற வாய்ப்பில்லை என்றும், முக்கியமாக இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக் கோப்பையை புறக்கணிக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil