ICC ODI World Cup 2023 schedule Tamil News: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக நாக்பூர், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், இந்தூர், பெங்களூரு, அகமதாபாத், சென்னை மற்றும் தர்மஷாலா உள்ளிட்ட 12 நகரங்களில் உள்ள மைதானங்கள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்தியா – பாகிஸ்தான் மோதல்
இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
தேதி மாற்றம்
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும் தேதியான அக்டோபர் 15க்கு பதிலாக வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியது. அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை வேறு தேதிக்கு மாற்ற பி.சி.சி.ஐ-க்கு பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்த கோரிக்கையை ஏற்று இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தின் தேதியை பி.சி.சி.ஐ மாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஆட்டம் இப்போது அக்டோபர் 15 ஆம் தேதிக்குப் பதிலாக அக்டோபர் 14 ஆம் தேதி, அதாவது அறிவிக்கப்பட்ட தேதிக்கு ஒருநாளுக்கு முன்பாக நடைபெற உள்ளது. மேலும்போட்டி தேதியை மாற்றுவதற்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் (பிசிபி) இருந்து ஒப்புதலைப் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியைத் தவிர, பாகிஸ்தான் அணி ஐதராபாத்தில் இலங்கையுடன் மோதும் போட்டியின் தேதியும் மாற்றப்பட்டுள்ளது. அட்டவணையில் இருந்த அக்டோபர் 12ம் தேதிக்குப் பதிலாக, போட்டி அக்டோபர் 10க்கு, அதாவது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே நடைபெற உள்ளது.
இந்த திருத்தப்பட்ட அட்டவணையின் படி, இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான போட்டிகளுக்கு பாகிஸ்தானுக்கு மூன்று நாட்கள் ஓய்வு கிடைக்கிறது. முந்தைய திட்டத்தின்படி இரண்டு நாட்கள் மட்டுமே அந்த அணிக்கு ஓய்வு இருந்தது. இந்த தேதி மாற்றத்திற்கு இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஒப்புதல் கொடுத்துள்ளதாக அறியப்படுகிறது.
இந்தியாவுடனான மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தானின் அடுத்த ஆட்டம் அக்டோபர் 20-ம் தேதி பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்குகிறது.
இலங்கையைப் பொறுத்தவரை, அக்டோபர் 7 ஆம் தேதி டெல்லியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடக்க உலகக் கோப்பை போட்டியில் விளையாடுகிறது. அக்டோபர் 10 ஆம் தேதி பாகிஸ்தான் ஆட்டத்திற்குப் பிறகு, அவர்கள் அக்டோபர் 16 ஆம் தேதி லக்னோவில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளனர்.
அக்டோபர் 11 ஆம் தேதி டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு, இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன் நான்கு நாட்களுக்குப் பதிலாக இப்போது மூன்று நாட்கள் ஓய்வை பெறும். இதன்பிறகு, இந்தியா அக்டோபர் 19-ம் தேதி அன்று புனேவில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது.
ஒரே நாளில் 3 போட்டிகள்
புதிய அட்டவணையின் படி, இப்போது அக்டோபர் 14 அன்று 3 போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தியா - பாகிஸ்தான் போட்டியைத் தவிர, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் சென்னையில் மோதுகின்றன. அதற்கு முன் மதியம் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து டெல்லியில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
டிங்கரிங்
பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த வாரம் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை மாற்றியமைக்கலாம் அல்லது அதன் நேரத்தை மாற்றலாம், ஆனால் அகமதாபாத்தில் இருந்து மாற்றப்படாது என்று கூறியிருந்தார். மூன்று அல்லது நான்கு போட்டிகளின் தேதிகளை மாற்றம் செய்ய சில மாநில வாரியங்கள் கோரிக்கை விடுத்துள்ளதால், மாற்றத்தைக் காணக்கூடிய ஒரே போட்டி இதுவல்ல என்று அவர் கூறினார்.
"இரண்டு அல்லது மூன்று மாநில வாரியங்கள் அட்டவணையை மாற்றியமைக்கக் கோரியுள்ளன. அது அவர்களின் உரிமை. நாங்கள் ஐ.சி.சி.யுடன் இணைந்து செயல்படுகிறோம். இது பல தளவாட சவால்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இடங்கள் மாறாது. நாம் பார்ப்பது என்னவென்றால், ஒரு அணிக்கு போட்டிகளுக்கு இடையில் ஆறு நாட்கள் இருந்தால், அதை ஐந்தாகக் குறைப்போம். ஒரு அணிக்கு இரண்டு நாட்கள் ஆட்டங்களுக்கு இடையில் இருந்தால், அதை மூன்று ஆக்குகிறோம். உலகக் கோப்பையில் போட்டிகளுக்கு இடையில் பயணம் செய்வதற்கும், ஓய்வெடுப்பதற்கும், பயிற்சி செய்வதற்கும் அணிகள் போதுமான நேரத்தைப் பெற வேண்டும்,” என்று ஜெய் ஷா கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.