Advertisment

'இந்தியா - பாக்., போட்டி மட்டுமல்ல இன்னும் சில ஆட்டமும் மாற்றம்': ஜெய் ஷா முக்கிய தகவல்

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மட்டுமல்லாமல் இன்னும் சில அணிகள் மோதும் போட்டிகளும் மாற்றப்பட உள்ளதாக பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Cricket World Cup: India-Pak match in Ahmedabad not the only one with a date change Tamil News

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் அது விரைவில் நடக்கும் என்றும் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார்.

Jay Shah confirms ICC World Cup schedule to undergo changes Tamil News: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக நாக்பூர், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஐதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், இந்தூர், பெங்களூரு, அகமதாபாத், சென்னை மற்றும் தர்மஷாலா உள்ளிட்ட 12 நகரங்களில் உள்ள மைதானங்கள் தீவிரமாக தயாராகி வருகிறது.

Advertisment

இந்தியா – பாகிஸ்தான் மோதல்

இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி, தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

தேதி மாற்றம்

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நடைபெறும் தேதியான அக்டோபர் 15-க்கு பதிலாக வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியது. அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை வேறு தேதிக்கு மாற்ற பி.சி.சி.ஐ-க்கு பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்த கோரிக்கையை ஏற்று இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தின் தேதியை பி.சி.சி.ஐ மாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகியது.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மட்டுமல்லாமல் இன்னும் சில அணிகள் மோதும் போட்டிகளும் மாற்றப்பட உள்ளதாக பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மாற்றி அமைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் போட்டி நடக்கும் இடத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அதாவது, போட்டி அகமதாபாத்தில் இருந்து மாற்றப்படாது. ஆனால், இன்னும் மூன்று அல்லது நான்கு போட்டிகளின் தேதிகளை மாற்ற வேண்டும் என்றும் சில மாநில கிரிக்கெட் வாரியங்களின் கோரிக்கை விடுத்துள்ளன.

இந்த விவகாரம் குறித்து பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா பேசுகையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி மட்டும் அல்ல மற்ற சில போட்டிகள் நடைபெறும் தேதியும் திருத்தம் செய்யப்பட உள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெய் ஷா "இரண்டு அல்லது மூன்று வாரியங்கள் அட்டவணையை மாற்றியமைக்கக் கோரியுள்ளன, அது அவர்களின் உரிமை. நாங்கள் ஐ.சி.சி.யுடன் இணைந்து செயல்படுகிறோம். இது பல சவால்களுக்கு வழிவகுக்கும் என்பதால், இடங்கள் மாறாது. நாம் பார்ப்பது என்னவென்றால், ஒரு அணிக்கு போட்டிகளுக்கு இடையில் 6 நாட்கள் இருந்தால், அதை ஐந்தாகக் குறைப்போம், ஒரு அணிக்கு இரண்டு நாட்கள் ஆட்டங்களுக்கு இடையில் இருந்தால், அதை மூன்று ஆக்குகிறோம். உலகக் கோப்பையில் போட்டிகளுக்கு இடையில் பயணம் செய்வதற்கும், ஓய்வெடுப்பதற்கும், பயிற்சி செய்வதற்கும் அணிகள் போதுமான நேரத்தைப் பெற வேண்டும்."என்று கூறினார்.

எந்தெந்த போட்டிகளின் தேதிகள் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது என்பதை குறிப்பிட மறுத்த ஜெய் ஷா, இது இந்திய வாரியம் மற்றும் ஐ.சி.சி-க்கு இடையே ஒருங்கிணைக்கப்பட வேண்டிய வேலை என்றார். "நான் அதில் தலையிடவில்லை. இடம் மாறாமல் இருப்பது எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அகமதாபாத் போட்டி பண்டிகை நேரத்தில் வருவதால், அதற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் இறுதி முடிவு இன்னும் சில நாட்களில் தெளிவாகிவிடும். இந்தியாவில் இது போன்ற சிறிய மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கும்." என்று அவர் கூறினார்.

விரைவில் டிக்கெட் விற்பனை

உலகக் கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் உள்ள நிலையில், டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் அது விரைவில் நடக்கும் என்றும் பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய் ஷா கூறினார்.

“உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் மாநில வாரியங்களின் கூட்டத்தை நாங்கள் நடத்தினோம். அதில் ஒன்று அல்லது இரண்டு தவிர, அனைவரும் கலந்து கொண்டனர். எங்கள் டிக்கெட் பார்ட்னரையும் கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டோம். திங்கட்கிழமை வரை காலக்கெடு உள்ளது. அதன் பிறகு ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆகியவை டிக்கெட்டுகள், அவற்றின் கிடைக்கும் தன்மை, விலை மற்றும் பிற அனைத்து சிக்கல்கள் குறித்து கூட்டு அறிவிப்பை வெளியிடும்.

இந்த முறை எங்களிடம் இ-டிக்கெட் இல்லை. ஆனால் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே ஏழெட்டு இடங்களில் நேரடி டிக்கெட்டுகள் தயாராக இருக்க ஏற்பாடு செய்வோம். அகமதாபாத் அல்லது லக்னோ போன்ற பெரிய இடங்களில் இ-டிக்கெட்டுகளை வைத்திருப்பது கடினமாக இருக்கும். பெரிய போட்டிகளில் அறிமுகம் செய்வதற்கு முன் இருதரப்பு தொடர்களில் சோதனை செய்வோம். எனவே, பேப்பர் டிக்கெட்டுகளை கையில் எடுத்து வர வேண்டியது கட்டாயமாகும்.

விரைவில் திரும்பும் பும்ரா

உலகக் கோப்பைக்கு ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவது இந்தியாவின் வாய்ப்புகளுக்கு இன்றியமையாததாக இருக்கலாம். மேலும் அவர் விரைவில் அணிக்கு திரும்புவார் என்று ஜெய் ஷா நம்பிக்கை தெரிவித்தார். “பும்ரா முற்றிலும் தகுதியானவர். அவர் அயர்லாந்து செல்ல வாய்ப்புள்ளது.'' என்றார்.

ஆகஸ்ட் 18-23 வரை இந்தியா அங்கு மூன்று டி20 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அந்த சுற்றுப்பயணத்தில் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மீண்டும் அணியில் சேர்க்கப்படலாம்.

பணிச்சுமை மேலாண்மை

சூர்யகுமார் யாதவ் மற்றும் சேதேஷ்வர் புஜாராவைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஜெய் ஷா தேசிய அணியில் இடம்பெறாத வீரர்கள் தேசிய கிரிக்கெட் அகாடமியின் அனுமதிக்கு உட்பட்டு உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்றார்."எங்களைப் பொறுத்தவரை, உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு முதலில் முன்னுரிமை அள்ளிக்கப்பட வேண்டும். இந்திய அணி மற்ற போர்டுகளின் நலனுக்காக மற்ற அணிகளை விட அதிகமாக பயணிக்கிறது. அவர்கள் இப்போது வெஸ்ட் இண்டீஸில் உள்ளனர், அதன் பிறகு அவர்கள் அயர்லாந்து மற்றும் பின்னர் ஆசிய கோப்பைக்கு செல்லவுள்ளனர். வீரர்களின் பணிச்சுமை பற்றியும் சிந்திக்க வேண்டும். எப்பொழுதும் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று அவர் கூறினார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Sports Cricket Indian Cricket Team India Vs Pakistan Bcci
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment