India Cricket Team Tamil News: இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி கண்டது. இந்த தொடரை அடுத்து இந்திய அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜூலை 12 முதல் தொடங்கும் இந்த தொடருக்கான போட்டிகள் டொமினிகா மற்றும் டிரினிடாட் ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்விக்கு பி.சி.சி.ஐ தரப்பில் எந்த எதிர்வினையும் இருக்காது என்றும், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது எனவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.
மேலும், 2023-2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியை முன்னிட்டு, ஒரே வயது வரம்பில் இருக்கும் சேட்டேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ரோகித் மற்றும் விராட் கோலி போன்ற வீரர்கள் அணியில் விளையாடுவார்கள் எனவும், கால அட்டவணையில் இந்தியாவின் கடைசிப் போட்டியான ஆஸ்திரேலியாவில் நடக்கும் பார்டர் கவாஸ்கர் தொடரில் இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் கலந்த ஒரு அணியை தேர்வுக்குழுவினர் களமிறக்க விரும்புகிறார்கள் என்றும் தெரிகிறது.
2012-2014 சுழற்சியின் போது, அதிகம் விரும்பப்பட்ட 4 வீரர்கள் (ஃபேப் ஃபோர்) ஓய்வு பெற்ற பிறகு, பேட்ஸ்மேன்களின் முக்கிய குழுவை உருவாக்குவதற்கு சில காலம் எடுத்து. அந்த இடைவெளியை தவிர்க்க தேர்வாளர்கள் முயல்கிறார்கள். ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடருக்குப் பிறகு அணியில் மாற்றம் நிகழும் வாய்ப்புள்ளது. இந்த தொடருக்குப் பிறகு அடுத்த தொடர் டிசம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடக்கும் நிலையில், அணியில் உள்ள முக்கிய வீரர்களில் ஒருவரின் ஃபார்மை பொறுத்து அவரை அணியில் இருந்து கழற்றி விடும் வாய்ப்புகளும் உள்ளது.
இந்த இரண்டு சுற்றுப்பயணங்களுக்கும், எந்த முதல்தர கிரிக்கெட்டிற்கும் இடையே கிட்டத்தட்ட 5 மாத இடைவெளி இருப்பதால், தற்போதைக்கு அனுபவமிக்க பேட்ஸ்மேன்களுடன் களமாட இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
முன்பு அறிவிக்கப்பட்டபடி, மும்பையின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் மகாராஷ்டிராவின் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் எதிர்கால இந்திய டெஸ்ட் அணி திட்டங்களில் முக்கிய வீரர்களாக இருப்பார்கள். இருப்பினும், இருவரும் அணியில் தொடக்கத்தைப் பெற காத்திருக்க வேண்டியிருக்கும்.
கேப்டன் ரோகித்தின் உடற்தகுதி குறித்து கவலைகள் இருந்தாலும், மாற்று கேப்டனுக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாலும், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை முடியும் வரை அவருடன் தொடர தேர்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் அவரது எதிர்காலம் குறித்த முடிவு உலகக் கோப்பைக்குப் பிறகுதான் எடுக்கப்படும். ஹர்திக் பாண்டியா தலைமையில் டி20 போட்டிகள் நடைபெறுவதைப் போலவே, ஒருநாள் போட்டிகளிலும் இதைச் செய்ய தேர்வாளர்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஒயிட்-பால் (ஒருநாள் மற்றும் டி20) அணிக்கு இந்திய அணியில் ஏராளமான விருப்பங்கள் இருப்பதால், டெஸ்ட் அணிக்கு முன்னதாக ஒருநாள் அணியில் சில மாற்றங்கள் நிகழும் வாய்ப்பும் உள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரரான புஜாரா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் தக்கவைக்கப்படுவார். 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவமிக்க 35 வயதான அவர், 2021/22ல் இந்தியாவின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அணியில் இருந்து கைவிடப்பட்டார். ஆனால் 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பினார்.
இந்திய அணியில் மீண்டும் இணைந்தது முதல் அவர் 8 டெஸ்டில், ஒரே ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் அடித்துள்ளார். அவர் இங்கிலாந்தின் சசெக்ஸிற்கான கவுண்டி கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்து வரும் நிலையில், 2022ல் அவரை திரும்ப அழைக்க அணி நிர்வாகத்தினருக்குள்ளேயே அச்சம் இருந்தது. இருப்பினும், பிசிசிஐ-யில் அவர் மற்றொரு வாய்ப்புக்கு தகுதியானவர் என்று ஒரு சிந்தனை இருந்தது. குறிப்பாக அவரது கடந்தகால செயல்திறன் காரணமாகவும் ஆஸ்திரேலியாவில் சவாலான சூழ்நிலைகளை அவர் சமாளித்தார் என்பதற்காகவும் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இளம் வீரரான ஜெய்ஸ்வால் உள்நாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அவரை நம்பர்.3 இடத்தில் களமிறக்குவது குறித்து பேசப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரரின் ஸ்லாட்டுக்கு ஏராளமான விருப்பங்கள் இருப்பதால், அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் அவரது கச்சிதமான நுட்பத்தை கணக்கிடுகிறார்கள் மற்றும் ஆக்ரோஷமான பேட்டிங்தான் அணிக்கு எண்.3 இல் தேவை.
அணிகள் தங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும் மைதானங்களில் விளையாட விரும்புவதால், குறைந்தது ஒன்று அல்லது இரண்டு ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களைக் கொண்டிருப்பது ஒரு முழுமையான தேவையாகக் கருதப்படுகிறது. 3வது இடத்தில் ஜெய்ஸ்வால் மற்றும் முதலிடத்தில் உள்ள ஷுப்மான் கில் ஆகியோர் நீண்ட கால அடிப்படையில் தேர்வாளர்கள் பார்க்கிறார்கள். வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் அணியை தேர்வு செய்ய தேர்வுக்குழு கூடும் போது ஜெய்ஸ்வாலின் பெயர் விவாதத்திற்கு வரும் என்றும் தெரிகிறது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்தியாவின் அடுத்த தொடர் ஜனவரி-பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராகவும் (5 டெஸ்ட்கள்), அதைத் தொடர்ந்து தலா ஒரு போட்டிகள் கொண்ட தொடர் அக்டோபர்-நவம்பரில் வங்கதேசம் மற்றும் நியூசிலாந்திற்கு எதிராகவும் நடக்கிறது.
தலைமை தேர்வாளர் தேடல்
இதற்கிடையில், பிசிசிஐ இன்னும் பொருத்தமான தேர்வாளர் தலைவரைத் தேடி வருகிறது. இது மாறுதல் கட்டத்திற்கு முக்கியமானது என்று வாரியத்தின் உறுப்பினர்கள் கருதுகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சேத்தன் சர்மா தேர்வாளர்களின் தலைவர் பதவியில் இருந்து விலகியதில் இருந்து, பிசிசிஐ செயல் தலைவராக எஸ்எஸ் தாஸ் நிரப்பப்படுவதற்கு மாற்றாக யாரையும் நியமிக்கவில்லை.
ஐபிஎல்லுக்குப் பிறகு, தலா 100 போட்டிகளுக்கு மேல் விளையாடிய வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு புகழ்பெற்ற வீரர்களை வாரிய அதிகாரிகள் அணுகினர். ஆனால் அவர்கள் ஊதியம் குறைவு என்பதை காரணம் காட்டி மறுத்துவிட்டனர். 2011 உலகக் கோப்பையை வென்ற அணியில் இருந்து மற்றொரு வீரரை தேர்வு செய்துவிட்டதாகவும், ஆனால் இன்னும் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் தேர்வுக்குழு வாரியத்தின் வட்டாரங்கள் சுட்டிக்காட்டினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.