இந்திய அணியில் நம்பர் 4 இடம் யாருக்கு? கடந்த உலகக் கோப்பையில் கிளம்பிய அதே பிரச்னை
2019ல் நடந்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு 7 மாதங்களுக்கு முன்பு, அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி 4வது இடத்திற்கு அம்பதி ராயுடு தான் சரியான வீரர் என்று குறிப்பிட்டார்.
ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், அவர்களுக்கு ஏற்பட்ட காயம் பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.
Cricket World Cup 2023 Tamil News: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி அதன் தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் ஆட்டம் அக்டோபர் 14ம் தேதி சனிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisment
இந்நிலையில், கடந்த உலகக் கோப்பையில் இந்தியா எதிர்கொண்ட அதே பிரச்னையை மீண்டும் எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது. அது என்ன பிரச்சனை என்றால், ஆடும் லெவன் வரிசையில் உள்ள '4வது இடம்' தான். 2019ல் இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் உலகக் கோப்பைக்கு 7 மாதங்களுக்கு முன்பு (அக்டோபர் 2018), அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி, 4வது இடத்தில் அம்பதி ராயுடு தான் சரியான வீரர் என்று குறிப்பிட்டார்.
ஆனால் ஏப்ரல் 2019 வாக்கில், 3டி (பவுலிங், பீல்டிங், பேட்டிங்) வீரராகக் கருதப்பட்ட ஆல்-ரவுண்டர் விஜய் சங்கரை தேர்வாளர்கள் தேர்வு செய்தனர். அதனால் ராயுடு உலகக் கோப்பை அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இந்தியாவின் இந்த முடிவுக்கு பல தரப்பட்ட விமர்சனங்கள் வந்தன. ராயுடு-வும் எதிர்வினையாற்றி இருந்தார்.
உண்மையில், உலகக் கோப்பை அணியில் இருந்த மற்ற எந்த பேட்டரை விடவும் அவர் 4வது இடத்தில் அதிக போட்டிகளில் விளையாடிவராக இருந்தார். சுவாரஸ்யமாக, சங்கர் உலகக் கோப்பையில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். அதில் இரண்டு முறை மட்டுமே 4வது இடத்தில் பேட்டிங் செய்தார். பின்னர் காயம் காரணமாகதொடரில் இருந்தே வெளியேறி இருந்தார் விஜய் சங்கர்.
இந்த நிலையில், இந்தியா இன்னும் 4வது மற்றும் 5வது இடத்தில் யார் விளையாடுவார் என்பதை முடிவு செய்யாமல், இப்போது, 2023ல், இந்தியா மற்றொரு உலகக் கோப்பையில் களமாடுகிறது. அதுவும் போட்டிகள் சொந்த மண்ணில் அரங்கேறுகின்றன.
டாப் ஆடர் மற்றும் மிடில் ஆர்டர்களுக்கு இடையேயான பாலமாக இருக்கும் வீரர் தான் இந்த 4வது பேட்டர். இந்த இடத்தில் களமாடும் ஒரு வீரர், இன்னிங்ஸை நிலைநிறுத்த அல்லது தேவைப்படும்போது ஸ்கோரை வேகமாக எடுக்க அணி நம்பக்கூடிய இஒருவராக இருத்தல். அதனாலேயே அந்த இடம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
அந்த இடத்திற்கு ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், அவர்களுக்கு ஏற்பட்ட காயம் பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. நடப்பு உலகக் கோப்பை சுழற்சியில் ஷ்ரேயாஸ் ஐயர் 20 போட்டிகளில் 47.35 சராசரியில் 805 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்தியாவின் 4வது பேட்டராக அறியப்பட்டார். இருப்பினும், பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் போது அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் அவரது நிலையை மோசமாக்கியது. அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் ஐபிஎல் 2023 மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதேபோல், ராகுல் 56.53 சராசரியில் 735 ரன்கள் எடுத்து 5வது இடத்தை தனக்கு சொந்தமாக்கினார். இருப்பினும், இந்தியன் பிரீமியர் லீக்கின் நடுப்பகுதியில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்தும், சர்வதேச கிரிக்கெட்டிலும் வெளியேறினார்.
ரிஷப் பண்ட்-க்கு ஏற்பட்ட கார் விபத்தைத் தொடர்ந்து நீண்டகாலமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவரது ஒயிட்-பால் கிரிக்கெட் அவரது டெஸ்ட் ஆட்டத்தைப் போல் சிறப்பாக இல்லை. ஆனால் அவர் 16 போட்டிகளில் 125* ரன்கள் உட்பட 492 ரன்கள் எடுத்தார். 4வது இடத்தில் பேட்டிங் செய்த அவர் 7 போட்டிகளில் 310 ரன்கள் எடுத்துள்ளார்.
தற்போது, இந்திய அணி உலகக் கோப்பைக்கு ஆயத்தமாகி வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் இருவரும் உடல் தகுதி பெற போராடி வருகின்றனர். அவர்களுக்குப் பதிலாக, இந்தியா நான்காம் மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ள பல பேட்டர்களை சிறிய வெற்றியுடன் முயற்சித்துள்ளது. இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அந்த இடங்களில் அதிக போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஆனால் இருவரும் வரிசையில் தங்களின் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.
இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் தலா 6 போட்டிகளில் நான்காவது இடத்தில் விளையாடி முறையே 106 மற்றும் 30 ரன்கள் எடுத்துள்ளனர். சூர்யகுமார் யாதவ் 11 போட்டிகளில் 5வது இடத்தில் விளையாடி 35.55 சராசரியில் 320 ரன்கள் எடுத்துள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயரும் ராகுலும் உலகக் கோப்பைக்கு முழு உடற்தகுதிக்குத் திரும்பினாலும், அவர்களுக்கு மேட்ச் பயிற்சி குறைவாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, இந்தியா 8 ஒருநாள் போட்டிகளில் (ஆசியாக் கோப்பை இறுதிப் போட்டிக்கு வந்தால் அது 9) விளையாடும். ஆனால் அவர்களின் மிடில் ஆர்டர் புதிர்க்கு விடை காண அவர்களுக்கு போதுமான நேரம் கிடைக்குமா? என்கிற கேள்வி இன்றளவும் தொடர்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil