சர்வதேச கால்பந்து அரங்கில் முன்னணி வீரராக வலம் வருபவர் போர்ச்சுக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. 37 வயதான இவர் கால்பந்து விளையாட்டில் பல சாதனைகளை படைத்துள்ளார். மேலும், சிறந்த வீரர்களுக்கென வருடாவருடம் வழங்கப்படும் தங்க கால்பந்து கோப்பையை 5 முறை வென்றுள்ளார்.
தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபிய கால்பந்து கிளப் அணியான அல்-நாஸ்ர் எஃப்சி அணியை வழிநடத்தி வருகிறார். 2024 -25 ஆம் ஆண்டுகளில் அந்த அணிக்காக 30 போட்டிகளில் ஆடி 25 கோல்களை அடித்து அசத்தி இருக்கிறார். தொழில்முறை கால்பந்து போட்டிகளில் அதிக கோல்கள் (865) அடித்தவர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார். 2022 ஃபிஃபா உலகக் கோப்பை சாம்பியனான லியோனல் மெஸ்ஸி, 821 கோல்களுடன் எலைட் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இதனிடையே, ரொனால்டோவும் - மாடல் அழகியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் அது காதலாக மாறியது. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 5 குழந்தைகள் இருக்கிறார்கள். இந்த நிலையில், நீண்ட கால காதலியான, ஜார்ஜினா ரோட்ரிக்ஸை கரம்பிடிக்க உள்ளார் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
திருமண நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை ஜார்ஜியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். அந்த நிச்சயதார்த்த மோதிரம் விலையுயர்ந்தது எனக் கூறப்படுகிறது. சுமார் 10 முதல் 15 காரட் வரை இருக்கலாம் என்றும், அதன் விலை 8 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.