Chennai-super-kings | ms-dhoni: 17-வது ஐ.பி.எல் (2024) டி20 கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் வருகிற 19ம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இதனையொட்டி தொடரில் களமாடும் 10 அணிகளும் தங்கள் அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டன.
இந்நிலையில், ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸ், அம்பத்தி ராயுடு உள்ளிட்ட 8 வீரர்களை விடுவித்தது. இதனால், அந்த அணியிடம் ரூ 31.4 கோடி கையிருப்பு உள்ளது. இந்த தொகையைக் கொண்டு இன்னும் திறமையான இளம் வீரர்களை சென்னை அணி வசப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரிசீலனை
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனியைப் போல ஃபினிஷர் மற்றும் விக்கெட் கீப்பர் ரோலுக்கு தமிழக இளம் வீரரான அஜிதேஷ் குருசாமியை சி.எஸ்.கே நிர்வாகம் தேர்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020ல் ஓய்வு அறிவித்தாலும், ஐ.பி.எல் போட்டியில் மட்டும் தொடர்ந்து விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டில் நடக்கும் தொடருக்காக அவர் தயாராகி வரும் நிலையில், அந்த சீசன் அவரின் கடைசி சீசனாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி நடக்கும் பட்சத்தில் கேப்டனாக அவரது இடத்தை நிரப்ப உள்ள வீரர் யார்? அணியின் விக்கெட் கீப்பராக யாரை அவர் தேர்வு செய்வார்? என பல கேள்விகள் ரசிகர்கள் மனதில் தொற்றிக்கொண்டுள்ளது. கேப்டன் பதவி யாருக்கு என்கிற விவாதம் ஒருபுறமிருக்க, அணியின் விக்கெட் கீப்பர் இடத்திற்கு 21 வயதான அஜிதேஷ் குருசாமியை சி.எஸ்.கே நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வீரர் ரெடி
அஜிதேஷ் குருசாமி தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். டி.என்.பி.எல் தொடருக்கான நெல்லை ராயல் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பராகவும் அவர் இருந்து வருகிறார். இதுவரை 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 100 ரன்களை, 161.3 ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்துள்ளார்.
டி.என்.பி.எல் தொடரில் குவாலிபையர் 2 ஆட்டத்தில், நெருக்கடியான சூழலில் களமிறங்கி 24 பந்துகளில் 48 ரன்களை குவித்து நெல்லை அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். கடந்த 2016ல் நடைபெற்ற 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில், 7 போட்டிகள் விளையாடி 190.78 ஸ்ட்ரைக் ரேட்டியில் 414 ரன்களை குவித்து இருந்தார். அவர் தோனியின் இடத்தை சரியான வீரராக இருப்பார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: அஜய் மண்டல், அஜிங்க்யா ரஹானே, தீபக் சாஹர், டெவோன் கான்வே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, எம்எஸ் தோனி, முகேஷ் சௌத்ரி, நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, ராஜ்வர்தன் ஷாட்ரஜ் ஹங்கர்கேகர், ரவீந்துராஜ் ஹங்கர்கேகர், , சிவம் துபே, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஆகாஷ் சிங், அம்பதி ராயுடு, பென் ஸ்டோக்ஸ், பகத் வர்மா, டுவைன் பிரிட்டோரியஸ், கைல் ஜேமிசன், சிசண்டா மகலா, சுப்ரான்ஷு சேனாபதி.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.