'ஜடேஜா - தோனிக்கு இடையே அப்படியொரு ஒரு பிரச்சனை இருந்ததாக எனக்கு தோன்றவில்லை. ஜடேஜா மன வருத்தத்தில் இருந்தது தோனியால் அல்ல.' என்று அம்பதி ராயுடு கூறியுள்ளார்.
ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் முன்னாள் இந்திய வீரர் அம்பதி ராயுடு. ஆந்திரப் பிரதேசம் மாநில குண்டூரைச் சேர்ந்த இவர் கடந்த 2013ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இவர் 55 ஒருநாள் போட்டிகளில் 1694 ரன்களும், 6 டி20 போட்டிகளில் 42 ரன்களும் எடுத்தார். 204 ஐ.பி.எல் போட்டிகளில் 4348 ரன்களை எடுத்துள்ளார்.
Advertisment
அவரது 13 ஆண்டுகால ஐபிஎல் வாழ்க்கையில், ராயுடு 2010 முதல் 2017 வரையிலான மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிக்காக விளையாடினர். அதன்பிறகு, 2018 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினர். சென்னை அணியால் அவர் 2022ம் ஆண்டில் 6.75 கோடி கொடுத்து தக்கவைக்கப்பட்டார்.
2023ம் ஆண்டு இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்திய நிலையில், அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு-வுக்கு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியா பிரியாவிடை கிடைத்தது. இந்த சீசனுடன் அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவர் கவுரவிக்கும் விதமாக சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய பிறகு, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜடேஜாவையும், அம்பதி ராயுடு-வையும் கோப்பை உயர்த்திப் பிடிக்க செய்தார் கேப்டன் எம்.எஸ் தோனி. அந்த தருணம் குறித்து அவர் நெகிழ்ந்து இருந்தார்.
இந்த நிலையில், தமிழில் பிரபல யூடியூப் சேனலுக்கு சமீபத்தில் அம்பதி ராயுடு அளித்துள்ள பேட்டியில் அவர் தோனி - ஜடேஜா இடையே நிலவியதாக கூறப்பட்ட மோதல் போக்கு குறித்து வெளிப்படுத்தியுள்ளார். அவர்களுக்கு இடையில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்தும் அவர் விவரித்துள்ளார்.
Advertisment
Advertisements
"கடந்த வருட போட்டிகளின் போது ஜடேஜா - தோனிக்கு (மஹி பாய்) இடையே அப்படியொரு ஒரு பிரச்சனை இருந்ததாக எனக்கு தோன்றவில்லை. ஜடேஜா மன வருத்தத்தில் இருந்தது தோனியால் அல்ல. அவரது தலைமையிலான அணி சரியாக விளையாடவில்லை. வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதற்கெல்லாம் ஜடேஜா காரணம் இல்லை என்றாலும், நாங்கள் எதிர்பார்த்த விளையாட்டை அனைத்து வீரர்களும் கொடுக்காததே அப்படி ஒரு நிலை வரக் காரணம்.
ஜடேஜாவுக்கு அதற்குப் பிறகு ஒரு இடைவெளி தேவைப்பட்டது. நிச்சயமாக யாருக்கும் இடையிலும் எந்தவொரு தவறுதலான புரிதல் என்பது இல்லவே இல்லை. ஆனால் பத்திரிகைகள் தவறுதலாக புரிந்துகொண்டு புனைவு செய்தார்கள். கிசுகிசுக்களை எழுதினார்கள்.
இந்த சீசனிலும் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர் தோனியுடன் மிக நெருக்கமாகவே பழகினார். எல்லாம் நன்றாக போனது. அதோடு, எங்களுக்காக கோப்பையையும் வென்று கொடுத்தார். அந்த கோப்பை வென்றபிறகு நடந்த சம்பவங்கள் பற்றி உங்களுக்கு தெரியும். அப்படியான நட்புறவைத் தான் அவர் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த உறவு எப்போதும் இருக்கும்.
அவர் (தோனி) இந்த அணியை வைத்து ஜட்டுவை (ஜடேஜா) இன்றைய நிலைக்கு ஆக்கியுள்ளார். அவர் 10-12 வருடங்கள் ஜடேஜாவை வளர்த்துள்ளார். ஜடேஜாவை உருவாக்கி விட்டவரே அவர் தான்." என்று அம்பதி ராயுடு அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil