கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி பந்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் இன்றைய நாளின் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் ப்ராவோவுக்கு பதிலாக சாம் கரண் இறக்கப்பட்டார்.
கொல்கத்தா 171/6
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் துவக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். இருப்பினும் கில் 9 ரன்களில் ரன் அவுட் முறையில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ராகுல் திரிபாதி சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து விளாசினார். இந்த நிலையில் வெங்கடேஷ் 18 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் மோர்கன் களமிறங்கினார். ஆனால், அவர் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், ஹேசல்வுட் பந்தில் டுப்ளசிஸ்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
அடுத்ததாக ஜோடி சேர்ந்த ராணாவும், திரிபாதியும் சிறப்பாக விளையாடினர். 45 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்தில் போல்டானார் திரிபாதி. பின்னர் களமிறங்கிய ரஸஸ் அதிரடி காட்டினார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய தினேஷ் கார்த்திக் சென்னையை பந்துவீச்சை அடித்து விளாசினார். அவர் 11 பந்தில் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இந்த நிலையில் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. ராணா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 37 ரன்கள் எடுத்திருந்தார். சென்னை அணி தரப்பில் தாக்கூர் மற்றும் ஹேசல்வுட் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.
சென்னை ’த்ரில்’ வெற்றி
பின்னர் 172 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை அணியில் துவக்க ஜோடிகளான டுப்ளசிஸ் மற்றும் ருதுராஜ் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர். சென்னை அணி 74 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் 40 ரன்களில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய மொயீன் அலி அதிரடியாக ஆடினார். இந்த நிலையில் சிறப்பாக ஆடி வந்த டுப்ளசிஸ் 30 பந்தில் 43 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய ராயுடு 10 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் மொயீன் அலியுடன் சேர்ந்த ரெய்னா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் மொயீன் அலி அவுட் ஆக, சென்னை அணி சரியத் தொடங்கியது. அதுவரை சென்னை எளிதாக வெற்றி பெறும் என்றிருந்த நிலை மெதுவாக மாறத் தொடங்கியது. ரெய்னாவுடன் சேர்ந்து கேப்டன் தோனி அணியை கரை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இருவரும் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர்.
கடைசி 2 ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில், 2 சிக்ஸ் மற்றும் 2 ஃபோர் அடித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் ஜடேஜா. ஆனால் இங்கே தான் ட்விஸ்ட் ஆரம்பமானது. கடைசி ஓவரில் 4 ரன் மட்டுமே தேவை என்ற நிலையில், நரைன் பந்து வீசினார். முதல் பந்தை சந்தித்த சாம் கரண் தூக்கி அடிக்க பார்த்து, கேட்ச் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த தாக்கூர், முதல் பந்தை டாட் ஆக்கி ரசிகர்களின் ப்ரஷரை ஏற்றினார். அடுத்த பாலில் பின்னால் தட்டி விட்டு 3 ரன்கள் எடுக்க ஸ்கோர் சமனானது. வெற்றிக்கு 1 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், அடுத்த பந்தை சந்தித்த ஜடேஜாவால் ரன் எடுக்க முடியவில்லை. அதைவிட அதிர்ச்சியாக அதற்கடுத்த பந்திலே எல்.பி.டபுள்.யூ ஆகி வெளியேறினார். கடைசி பந்தில் வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில், களமிறங்கிய சாஹர், மிட் விக்கெட் திசையில் அடித்து, 1 ரன் எடுத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
கடைசி பந்தில் சென்னை அணி வெற்றி பெற்று, புள்ளி பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா தரப்பில் நரைன் 3 விக்கெட் வீழ்த்தினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.