ஐபிஎல் கிரிக்கெட்டின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின. இதில் 13 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியை வென்றது.
பூனேவில் நேற்று நடைபெற்ற இந்தப் போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்றது. இதையடுத்து அவர்கள் முதலில் ஃபீல்டிங் செய்ய முடிவெடுத்தனர். பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை அணி முதல் வீரர்களாக ஷேன் வாட்சன் மற்றும் டூ பிளெஸ்ஸிஸ் இறக்கினார்கள். டூ பிளெஸ்ஸிஸ் 33 ரன்கள் வெளியேற அடுத்து வந்த ரெய்னாவும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். ஆனால் அந்த இழப்பை ராயுடு ஈடுகட்டினார். ராயுடுவும் வாட்சனும் இணைந்து அதிரடியைத் தொடர்ந்தனர்.
சிறப்பாக விளையாடிய வாட்சன் 40 பந்துகளில் 7 சிக்சர்கள் 4 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்து மிஷ்ரா வீசிய பந்தில் பிளெங்கெட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் ராயுடுவுடன் ஜோடி சேர்ந்த தோனி தனக்கே உரிய ஸ்டைலில் அதிரடி ஆட்டட்தை ஆடத்தொடங்கினார். இதனால் மைதானத்தில் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்த ஜோடி 4 விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. தோனி 22 பந்துகளில் 51 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 211 ரன்களை எடுத்தது.
212 ரன்கள் எடுத்தால் போட்டியை வெற்றிபெறலாம் என்ற இலக்குடன் டெல்லி அணி ஆடத் தொடங்கியது. தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை டெல்லி அணி இழந்தது. கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 13 ரன்களுடன் ரன் அவுட் முறையில் பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லும் 6 ரன்களுடன் வெளியேற ரிஷப் பந்தும் வி ஷங்கரும் போட்டியில் ஆடினார்கள்.
ரிஷப் பந்த் 45 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து நிஜிதி வீசிய பந்தில் ஜடேஜாவிடம் கேட் கொடுத்து வெளியேறினார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.