Matheesha Pathirana’s Sister Vishuka Pathirana – MS Dhoni Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்று வரும் 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 10வது முறையாக இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. இப்போட்டியானது வருகிற ஞாயிற்றுகிழமை அகமதாபாத்தில் நடக்கிறது. குவாலிபையர்-2 வெற்றியை ருசிக்கும் அணியை சென்னை சந்திக்க உள்ளது.

தோனியின் அரவணைப்பு – அபார பந்துவீச்சு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருபவர் இலங்கையின் இளம் வேகப்பந்துவீச்சாளர் மதீஷா பத்திரானா. கடந்த சீசனில் அறிமுகமான இவர், நடப்பு சீசனில் தனது அபார பந்துவீச்சு திறனை வெளிப்படுத்தி வருகிறார். ரசிகர்கள் அவரை ‘ஜூனியர் மலிங்கா’ என்று தூக்கி கொண்டாடும் அளவிற்கு அவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சனால் ஈர்க்கப்பட்ட கேப்டன் தோனி அவரை சென்னை அணியில் இணைத்தார்.

சென்னை அணியில் உள்ள பயிற்சியாளர்கள் அவரை பட்டை தீட்ட, முக்கிய போட்டிகளில் அவர் அசத்தலாக விக்கெட்டுகளை வீழ்த்தி ஜொலிக்கிறார். டெத் ஓவர்களில் பந்துவீச ஒரு பவுலர் கண்டிப்பாக அணிக்கு தேவை என்ற சூழல் எழுந்த நிலையில், பத்திரானாவின் வருகை பந்துவீச்சு வரிசைக்கு அசுர பலம் சேர்த்துள்ளது. சென்னை அணியில் புதிய டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டாக உருவெடுத்துள்ள அவர் நடப்பு சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பத்திரானாவுக்கு கேப்டன் தோனி தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவது, முக்கிய தருணங்களில் அவர் விக்கெட் வீழ்த்திய போது தோளில் தட்டிக் கொடுத்து ஊக்கம் அளிப்பது, அவருக்காக போட்டியை தாமதப்படுத்தி நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது போன்ற சம்பவங்கள் கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் தோனியின் அன்பைப் பெற்றுள்ள பத்திரானா, அவரது அரவணைப்பில் திளைத்து வருகிறார்.
நெகிழ்ச்சி பதிவு
இந்நிலையில், மதீஷா பதிரானாவின் பெற்றோர், சகோதரி மற்றும் குடும்பத்தினர் கேப்டன் தோனியை சந்தித்தனர். இந்த சந்திப்பு குறித்து பதிரானாவின் சகோதரி விஷுகா பதிரானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘மதிஷாவைப் பற்றி நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை, அவர் எப்போதும் என்னுடன் தான் இருக்கிறார்’ என்று தல சொன்னபோது, மல்லி (மதீஷா பதிரானா) பாதுகாப்பான கைகளில் தான் இருக்கிறார் என்பதை இப்போது உறுதியாக நம்புகிறோம். இந்த தருணங்கள் நான் கனவு கண்டதற்கும் அப்பாற்பட்டவை என்று அவர் கூறியுள்ளார். இந்தப் பதிவு சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil