வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்காக தோனி விளையாடுவாரா என்பதை அறிய தோனியின் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ஆர்வலர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த ஏலம் நடத்தப்படுவதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தங்கள் வசம் தக்கவைத்துக் கொள்ளலாமென அனுமதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தக்க வைக்கப்படும் வீரர்களின் விவரங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு அணியினரும் எந்தெந்த வீரர்களை தங்கள் அணியிலேயே தக்க வைக்க விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் கிரிக்கெட் ரசிகர்களிடம் காணப்படுகிறது.
மற்றொருபுறம், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சிஎஸ்கே-வில் தக்க வைக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எல்லோரிடமும் எழுந்துள்ளாது. இதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறுவாரா என்ற கேள்வியை பலர் முன்வைக்கின்றனர். இந்நிலையில், திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கலந்து கொண்டார்.
அப்போது வரும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக தோனி விளையாடுவாரா என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த காசி விஸ்வநாதன், ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்த முடிவை தோனி இன்னும் தங்களிடம் தெரிவிக்கவில்லை எனக் கூறினார். மேலும், வீரர்களின் விவரங்களை அறிவிக்க அக்டோபர் 31-ஆம் தேதி கடைசி நாள் என்பதால், அதற்கு முன்னதாக தனது முடிவை தோனி கூறுவார் என அவர் தெரிவித்தார். மேலும், தோனி தொடர்ந்து விளையாட வேண்டுமென தங்களுக்கும் விருப்பம் இருப்பதாக காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.
இதேபோல், ”UNCAPPED PLAYERS” விதிமுறை தோனிக்காக கொண்டு வரப்படவில்லை எனவும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டார். சிஎஸ்கே அணிக்காக எந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பது குறித்து ஏலத்திற்கு பின்னரே தெரிய வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தோனி தொடர்ச்சியாக விளையாட வேண்டுமென அவரது ரசிகர்கள் விரும்பினாலும், தோனியின் முடிவு என்ன என்பதை பொறுத்திருந்த காண வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.