/indian-express-tamil/media/media_files/2025/08/16/csk-clarify-dewald-brevis-signing-after-ashwin-remarks-tamil-news-2025-08-16-17-09-14.jpg)
சி.எஸ்.கே அணியால் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மண்ணில் ஆண்டுதோறும் அரங்கேறும் ஐ.பி.எல். டி-20 தொடரில் களமாடி வரும் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே). இத்தொடரில் இதுவரை 5 முறை கோப்பை வென்றுள்ள இந்த அணி சென்னையை தலைமையிடமாக கொண்டது. இந்த ஆண்டு நடைபெற்ற 18-வது சீசனில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து பெரும் ஏமாற்றம் அளித்தது.
இந்நிலையில், இந்த சீசனுக்கான சென்னை அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் குர்ஜப்னீத் சிங் விலகியதால், அவருக்கு பதிலாக மாற்று வீரராக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அதிரடி இளம் பேட்ஸ்மேன் ‘பேபி ஏ.பி.டி’ என்று அழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ் அணியில் சேர்க்கப்பட்டார். மெகா ஏலத்தில் அவரை யாரும் வாங்கவில்லை என்பதால், குர்ஜப்னீத் சிங்கின் ஏலத் தொகையான ரூ.2.2 கோடிக்கு பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், சி.எஸ்.கே அணியால் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, பிரெவிசை சி.எஸ்.கே அணி கூடுதல் தொகைக்கு வாங்கியதாக இந்திய வீரரும், சி.எஸ்.கே அணி வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்ததார். இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பேசு பொருளாக மாறியது.
இது தொடர்பாக பேசிய அஸ்வின், "டிவால்ட் பிரெவிஸ் குறித்து நான் ஒரு விஷயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிரெவிஸ் கடந்த சீசனின் இரண்டாம் பாதியில் மிகவும் சிறப்பாக விளையாடினார். அதற்கு முன்னதாக சில அணிகள் அவரை வாங்க பேச்சுவார்த்தை நடத்தியதாக கேள்விப்பட்டேன். ஆனால் அவரது அடிப்படை விலைக்கு (ரூ.75 லட்சம்) மேல் கூடுதலாக பணம் கொடுக்க அந்த அணிகள் தயாராக இல்லாததால் அவர்களின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தன.
பொதுவாக ஒரு மாற்று வீரரை அணியில் அவரது அடிப்படை விலையில் ஒப்பந்தம் செய்ய வேண்டி இருக்கும். ஆனால் சில நேரம் என்ன நடக்கிறது என்றால், சிலர் தங்களுக்கு கூடுதல் தொகை கொடுத்தால்தான் விளையாட வருவோம் என்று தெரிவிப்பார்கள். ஏனெனில் அடுத்த ஆண்டு அதிக தொகைக்கு விலைபோக வாய்ப்புள்ளது என்று அவர்களுக்கு தெரியும். இதுதான் பிரேவிசின் நிலைப்பாடாகவும் இருந்தது.
அவர் கேட்ட தொகையை கொடுக்க சென்னை அணி தயாராக இருந்ததால், அணியுடன் இணைந்தார். அவரது வருகையால் பேட்டிங் வரிசையும் வலுவடைந்தது. இப்போது சென்னை அணியின் கையில் கிரீடம் போன்ற ஒரு வீரர் கிடைத்துள்ளார். இந்த ஆண்டு நடைபெறும் மினி ஏலத்தில் சென்னை அணி கையில் ரூ.30 கோடியுடன் நுழைவார்கள். சி.எஸ்.கே-வின் அடுத்த சீசன் சிறப்பாகவும் சரியானதாகவும் தெரிகிறது” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், அஸ்வினின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "ஐ.பி.எல் 2025 தொடரில், மாற்று வீரராக டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்தபோது, அனைத்து நடவடிக்கைகளும் ஐ.பி.எல் விதிமுறைகளின்படியே மேற்கொள்ளப்பட்டன.
🚨OFFICIAL STATEMENT🚨
— Chennai Super Kings (@ChennaiIPL) August 16, 2025
Dewald Brevis signed as per the IPL Player Regulations 2025-2027, clause 6.6 under Replacement Players.
ஐபிஎல் வீரர்கள் ஒழுங்குமுறை விதிகள் 2025-27, பிரிவு 6.6-ன் கீழ் 'மாற்று வீரர்கள்' என்ற தலைப்பில் உள்ள விதியின்படி, 'காயமடைந்த அல்லது விளையாட முடியாத வீரருக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட அதிகமான சம்பளத்திற்கு ஒரு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யக்கூடாது' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ. 2.2 கோடி என்ற தொகைக்கு மிகாமல், அதே தொகைக்கு டெவால்ட் பிரெவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதில் எந்த விதிமீறலும் இல்லை. காயமடைந்த குர்ஜப்னீத் சிங்கிற்குப் பதிலாக, தென்னாப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.2.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது" என்று விளக்கம் அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.