Deepak Chahar Talks About Jadeja – MS Dhoni Tamil News: 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இத்தொடர் மிக முக்கியமான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நடப்பு சீசனில் அடுத்த சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக விளையாடி வருகின்றன. இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 ஆட்டங்களில் 6ல் வெற்றி, 4ல் தோல்வி, ஒரு ஆட்டத்திற்கு முடிவு இல்லை என 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
தோனி ஓய்வு – குவியும் ரசிகர்கள்
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பரவலான கருத்துக்கள் நிலவி வந்தது. ஆனால், தனது ஓய்வு குறித்து அவர் இதுவரை எந்த வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவும் இல்லை, அது தொடர்பாக அவர் பொதுவெளியில் பேசியதும் இல்லை. இருப்பினும், சென்னை அணியின் ரசிகர்கள் ‘இதுதான் அவர் ஆடும் கடைசி ஐபிஎல்’ தொடர் என நினைத்து, சென்னையிலும், சி.எஸ்.கே போட்டி நடக்கும் மற்ற மைதானங்களில் ரசிகர்கள் கடல் அலைபோல் திரண்டு வருகிறார்கள்.

இதில் பெரும்பாலான சி.எஸ்.கே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது, கேப்டன் தோனியை களத்தில் பார்க்க வேண்டும் என்பதுதான். அதுவும் கடைசி ஓவர்களில் களமாடும் அவர் வின்னிங் ஷாட்டாக அல்லது ஃபினிஷ் டச்சாக, சில பவுண்டரி – சிக்ஸர்களை பறக்க விட வேண்டும் என்பதும், “தல” தரிசனம் கிடைத்தால் போதும் என்பதுமாகத்தான் ரசிகர்கள் நினைக்கின்றனர்.

ஜடேஜா வருத்தம் – தீபக் சாகர் ஆதங்க ஜோக்

ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு சில எதிர்மறையான விமர்சனங்களை கொண்டு வந்துள்ளது. அதாவது, சி.எஸ்.கே ரசிகர்களில் சிலர், தோனி பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டும் என்பதற்காக, ஜடேஜா போன்ற முன்னணி ஆல்ரவுண்டர் வீரரை சீக்கிரம் ஆட்டமிழந்து வெளியேற அவரிடமே கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதே பாணியில் பதாகைகளை ஏந்திய வண்ணம் சி.எஸ்.கே ரசிகர்கள் வேண்டிக் கொள்வது கடைசியாக நடந்த சில போட்டிகளில் பார்க்க முடிந்தது.

Photo credit: R. Pugazh Murugan
ஆனால், ரசிகர்களின் இப்படியான வேண்டுகோள் தனக்கு வருத்தமளிப்பதாக ஆல்ரவுண்டர் வீரர் ஜடேஜா தீபக் சாகரிடம் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தீபக் சாகர், “தோனி பேட்டிங் ஆட வர வேண்டும் என்பதற்காக விளையாடிக் கொண்டு இருப்பவர்களை ஆவுட் ஆக சொல்லி வேண்டுகிறார்கள். ஜடேஜா இதைப் பற்றி என்னிடம் பேசுகையில், ‘தோனி பேட்டிங் செய்ய நான் அவுட் ஆக வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகிறார்கள். என்ன மாதிரியான சப்போர்ட் இது?” என்று கலகலப்பாக தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil