ஐ.பி.எல் புள்ளி பட்டியலில் சி.எஸ்.கே டாப் 2 இடங்களுக்குள் நுழைந்ததால் இறுதிப் போட்டிக்கு செல்ல 2 வாய்ப்பு கிடைக்கிறது. முதல் வாய்ப்பாக வருகிற செவ்வாய்க்கிழமை குஜராத் அணியுடன் சி.எஸ்.கே மோதுகிறது.
இந்தியாவில் வெவ்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் 16-வது ஐ.பி.எல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றன. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வென்றதன் மூலமாக சி.எஸ்.கே 17 புள்ளிகளை எட்டி இருக்கிறது. நேற்று இரவு நடைபெற்ற மற்றொரு போட்டியில் கொல்கத்தாவை வீழ்த்தியதன் மூலமாக லக்னோ அணியும் 17 புள்ளிகளை எட்டிப் பிடித்தது. ஆனாலும் ரன்ரேட் அடிப்படையில் சி.எஸ்.கே முன்னால் நிற்கிறது. எனவே குஜராத் அணிக்கு அடுத்தபடியாக புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தை சி.எஸ்.கே தட்டிச் சென்றது. இதன் மூலமாக இறுதிப் போட்டிக்கு செல்ல குஜராத், சி.எஸ்.கே ஆகிய இரு அணிகளுக்கும் தலா 2 வாய்ப்புகள் கிடைக்கின்றன.
முதலாவதாக வருகிற செவ்வாய்க்கிழமை (23-ம் தேதி) நடைபெறும் குவாலிஃபயர்-1 போட்டியில் குஜராத்- சி.எஸ்.கே மோதுகின்றன. இந்த போட்டியில் ஜெயிக்கும் அணி நேரடியாக ஃபைனலுக்கு சென்று விடும். இதில் தோற்கும் அணிக்கு ஃபைனலுக்கு செல்ல இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை குஜராத், சி.எஸ்.கே, லக்னோ ஆகிய 3 அணிகள் மட்டுமே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்து இருக்கின்றன. 4-வது அணி மும்பையா? பெங்களூருவா? ராஜஸ்தானா? என்பது இன்று முடிவாகும்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை- ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணி ஆட்டத்தில் பெங்களூரு- குஜராத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டங்களில் பெங்களூரு, மும்பை ஆகிய இரு அணிகளும் ஜெயித்தால் ரன் ரேட் அடிப்படையில் இரண்டில் ஒன்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.
ஒரு வேளை பெங்களூரு அல்லது மும்பை ஏதேனும் ஒரு அணி மட்டும் ஜெயித்தால் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிடும். பெங்களூரு- மும்பை ஆகிய இரு அணிகளுமே தோற்றால் மொத்தம் மூன்று அணிகள் நான்காவது இடத்திற்கு சம புள்ளிகள் உடன் மல்லுக்கு நிற்கும். அதாவது மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய 3 அணிகளில் எது ரன்ரேட் அடிப்படையில் முன்னால் இருக்கிறதோ அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு வரும்.
இந்த வகையில் பிளே ஆஃப்-க்கு தேர்வு செய்யப்படுகிற அணி லக்னோ அணியுடன் எலிமினேட்டர் சுற்றில் மோதும். அதில் தோற்கும் அணி போட்டியை விட்டு வெளியேறும். இதில் ஜெயிக்கும் அணி குவாலிஃபயர் 1-ல் தோற்கும் (சி.எஸ்.கே அல்லது குஜராத்) அணியுடன் மோத வேண்டி இருக்கும். குவாலிஃபயர் -2 என அழைக்கப்படும் இந்த ஆட்டத்தில் ஜெயிக்கும் அணி குவாலிஃபயர் 1-ல் ஜெயித்த அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும். இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு கோப்பை வழங்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.