Chennai Super Kings Head coach Stephen Fleming – MS Dhoni Tamil News: 16வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக மிச்சேல் மார்ஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணியின் சார்பில் அதிகபட்சமாக பதிரனா 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 15 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.

ஃப்ளமிங் சொன்ன ரகசியம்
இந்நிலையில், இந்தப் போட்டிக்கு பிறகு பேசிய சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங், தோனிக்கு சிறப்புப் பாராட்டு தெரிவித்தார். மேலும், அவரது பயிற்சி அணுகுமுறையையும் வெளிப்படுத்தினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “அவர் (தோனி) ஒரு குறிப்பிட்ட வழியில் பயிற்சி செய்து வருகிறார்.அவர் நீண்ட காலமாக பேட்டிங் செய்யவில்லை என்பது அவருக்குத் தெரியும். அவர் கடைசி மூன்று போட்டிகளில் அதிக கவனம் செலுத்தினார். விக்கெட்டுகளுக்கு இடையில் அவரால் வேகமாக ஓட முடிவில்லை என்றாலும், அதற்காக அவர் கடினமாக முயற்சி செய்ததை பார்க்க முடிந்தது. மேலும், அவர் பந்துகளை மிகவும் வலுவாக அடிக்கும் பயிற்சியில் கவனம் செலுத்தியும் வருகிறார்.

அதன் பலனை நீங்களே காணலாம். அது அவருக்கு மைதானத்தை சுற்றி விளையாட மிகவும் வசதியாக இருக்கிறது. அவர் எவ்வளவு நல்ல ஹிட்டர் என்பது எங்களுக்குத் தெரியும். மேலும் சில பகுதிகளில் அவனது அணுகல் இன்னும் வலுவாக உள்ளது. கடினமான 20 ஓவர் முடிவில் அந்த கேமியோ மதிப்புமிக்கதாக இருந்தது” என்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil