CSK chances to playoffs: ஐபிஎல் வரலாற்றில் மோசமான தோல்வியை பதிவு செய்திருக்கும் சி.எஸ்.கே அணிக்கு இன்னும் வாய்ப்பு இருக்கிறதா? விசில் போடு ஆர்மியின் கனவுகளுக்கு இன்னும் சிறகுகள் இருக்கிறதா? பார்க்கலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 7 தோல்விகளைப் பெற்றிருக்கிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தலா 9 ஆட்டங்களில் ஆடி, 3 வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. மேற்படி 3 அணிகளும் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் சி.எஸ்.கே., புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் நிற்கிறது.
சி.எஸ்.கே அணியை கடந்த ஆட்டத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ் 8 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்திருக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் 7 வெற்றிகளுடன் ‘டாப்’பில் நிற்கிறது. மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகியனவும் டாப் 4-ல் இருக்கின்றன.
மொத்த 8 அணிகளில் 4 அணிகள், அடுத்த சுற்றன பிளே ஆஃப்-க்கு முன்னேற முடியும். இப்போதைக்கு டெல்லி அணி கம்பீரமாக நுழைந்துவிட்டதாக கூறலாம். மற்ற அணிகளுக்கு அடுத்த வெற்றிகளும் முக்கியமே. சென்னை அணியைப் பொறுத்தவரை இன்னும் 4 ஆட்டங்கள் பாக்கி இருக்கிறது. அந்த 4 ஆட்டங்களில் ஒன்றில்கூட தோற்கக் கூடாது.
அப்படி ஜெயிக்கும் பட்சத்தில் சென்னை அணியின் மொத்தப் புள்ளிகள் 14 ஆகும். ரன் ரேட்டும் முக்கியப் பங்கு வகிக்கலாம். மற்ற அணிகள் எப்படி ஜெயிக்கின்றன? என்பதையும் பொறுத்தே சி.எஸ்.கே.வின் பிளே ஆஃப் வாய்ப்புகள் இருக்கின்றன. இதே நிலைதான் பஞ்சாப், ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கும்!
எனவே ஆட்டத்தில் இன்னும் உயிர் இருக்கிறது. ஆனால் அதற்குள் சி.எஸ்.கே கேப்டன் டோனி, தங்கள் அணியில் இளம் வீரர்களுக்கு ஸ்பார்க் இல்லை என குறிப்பிட்டது சர்ச்சை ஆகியிருக்கிறது. ‘மூத்த வீரரான கேதர் ஜாதவிடம் என்ன ஸ்பார்க்க கண்டீங்க, ஒரே ஆட்டத்தில் களம் இறங்கினாலும் உருப்படியாக ஆடிய இளம் வீரர் ஜெகதீசனிடம் என்ன ஸ்பார்க் இல்லை?’ என டோனிக்கு சுடச்சுட கேள்விகளை வீசியிருக்கிறார், முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த்.
களத்தில் ஆடலைன்னாலும், வெளியே அடித்து ஆடிக்கொண்டிருக்கிறார் டோனி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"