ஐபிஎல் 2018 இறுதி போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் 181 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியது. 2 ஆண்டுகள் தடைக்கு பிறகு மீண்டும் வெற்றியை தழுவியது சென்னை அணி.
எல்லா ஆண்டு விளையாடும் பொழுதே வெற்றியைச் சிறப்பாக கொண்டாடும் வீரர்கள், 2 ஆண்டுகளுக்குப் பிறகு களத்தில் இறங்கி, அபாரமாக வெற்றிபெற்றால் கேட்கவா வேண்டும். 181 ரன்கள் பெற்றதும் சென்னை அணி வீரர்களின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. வெற்றிக்கோப்பையை தூக்கி வைத்துக் கொண்டாடிய வீரர்கள் ஒருபுறம், மனைவி மற்றும் மகள்களுடன் நடந்த கொண்டாட்டம் என்று மைதானமே களைக்கட்டியது.
வெற்றிக் கோப்பையை கைகளில் வைத்துக்கொண்டு அரங்கம் அதிரச் சென்னை அணியினர் சென்னை சூப்பர் கிங்ஸ் பாடல் பாடி வெற்றி கோஷம் போட்டனர்.
ஆனால் இது எல்லா ஆண்டும் இருப்பது தானே. இந்த ஆண்டு என்ன புதிது?
சென்னை அணியினர் ஒன்றாகத் திரண்டு கொண்டாடும் இடத்தில் திடீரென மாயமான தோனி எங்கே போனார் என்று ரசிகர்கள் குழம்பினர். இவருடன் சின்ன தல ரைனாவும் மாயமானார். மொத்த அணியும் கோஷம் எழுப்ப ஹர்பஜன் சிங் மட்டும் ஏன் எழுந்து செல்கிறார்? என்று பல எண்ணங்கள் தோன்ற, திடீர் ஷாக் கொடுத்தார்கள் இவர்கள்.
வீரர்கள் அனைவரும் கோப்பையை தூக்கி வைத்துக் கொண்டாட தல தோனி தனது செல்ல மகள் ஸிவாவை தூக்கி வைத்துக் கொண்டாடினார்.
பின்பு சின்ன தல ரைனா தனது மகள் கிரேஸியா தூக்கி வைத்துக்கொண்டு சென்னை பாடல் பாடினார். பாஜி எங்கேயோ எழுந்து போனார் என்று நினைத்தவர்களுக்கு, தந்து மகள் ஹினையாவை தூக்கி கொண்டு வந்து சர்பிரைஸ் கொடுத்தார்.
பிரம்மாண்ட வெற்றியில் வரும் மகிழ்ச்சியால் பல விஷயங்கள் கண்களை மறைத்துவிடும் என்பார்கள். ஆனால் மாபெரும் வெற்றியாக இருந்தாலும், நாங்கள் அன்பு நிறைந்த தந்தைகள் என்று நிரூபித்திருக்கிறார்கள்.