Ambati-rayudu: ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் முன்னாள் இந்திய வீரர் அம்பதி ராயுடு. ஆந்திரப் பிரதேசம் மாநில குண்டூரைச் சேர்ந்த இவர் கடந்த 2013ம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமானார். இவர் 55 ஒருநாள் போட்டிகளில் 1694 ரன்களும், 6 டி20 போட்டிகளில் 42 ரன்களும் எடுத்தார். 204 ஐ.பி.எல் போட்டிகளில் 4348 ரன்களை எடுத்துள்ளார்.
அவரது 13 ஆண்டுகால ஐபிஎல் வாழ்க்கையில், ராயுடு 2010 முதல் 2017 வரையிலான மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ) அணிக்காக விளையாடினர். அதன்பிறகு, 2018 முதல் 2023 வரையிலான ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடினர். சென்னை அணியால் அவர் 2022ம் ஆண்டில் 6.75 கோடி கொடுத்து தக்கவைக்கப்பட்டார்.
2023ம் ஆண்டு இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சென்னை அணி வீழ்த்திய நிலையில், அந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயுடு-வுக்கு தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியா பிரியாவிடை கிடைத்தது. 2023 சீசனுடன் அவர் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
அவரை கவுரவிக்கும் விதமாக சென்னை அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றிய பிறகு, அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த ஜடேஜாவையும், அம்பதி ராயுடு-வையும் கோப்பை உயர்த்திப் பிடிக்க செய்தார் கேப்டன் எம்.எஸ் தோனி. அந்த தருணம் குறித்து அவர் தனது சமீபத்திய பேட்டிகளில் நெகிழ்ந்து இருந்தார்.
அரசியலில் நுழைந்த ராயுடு
இந்நிலையில், இந்திய அணி மற்றும் சி.எஸ்.கே அணியின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு ஜெகன்மோகன் ரெட்டியின் முன்னிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் நேற்று வியாழக்கிழமை இணைந்துள்ளார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவரை கட்சியில் வரவேற்று கட்சி சால்வை அணிவித்தார்.
விரைவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் குண்டூர் மாவட்டத்தில் இருந்து போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அதிகார பூர்வமான செய்தியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“