CSK Tamil News: சி.எஸ்.கே முகாமில் சீனியர் வீரர் ஹர்பஜன் விலகல் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. கொரோனா பயம்தான் அவரது விலகலுக்கு காரணமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஐபிஎல் இந்த சீசனில் தொடக்கம் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது. இதில் லேட்டஸ்ட், மூத்த சுழற்பந்து விச்சாளரான ஹர்பஜன் விலகல்! இதர வீரர்கள் துபாய் கிளம்பியபோது, ஹர்பஜன் அவர்களுடன் செல்லவில்லை. சில நாட்கள் தாமதமாக வந்து சேருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘சொந்த காரணங்களுக்காக இந்த சீசன் ஐபிஎல்-ல் இருந்து விலகுகிறேன். சி.எஸ்.கே நிர்வாகம் எனக்கு ஆதரவாக இருக்கிறது’ என வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டார் ஹர்பஜன்.
சுரேஷ் ரெய்னா விலகல் சி.எஸ்.கே முகாமுக்கு ஷாக் கொடுத்திருந்த நிலையில், அடுத்த அதிர்ச்சியாக ஹர்பஜன் விலகல் அறிவிப்பு வந்திருக்கிறது. சுரேஷ் ரெய்னாவின் நெருங்கிய உறவினர் இருவர் கொலை செய்யப்பட்ட சூழலில் அவர் எடுத்த முடிவை நியாயப்படுத்த முடிந்தது. ஆனால் ஹர்பஜன் விலகலுக்கான காரணம், கொரோனா பயம் என்பதாகவே தகவல்கள் கசிகின்றன.
சி.எஸ்.கே முகாமில் இரு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், ஹர்பஜன் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்பதாக செய்திகள் வருகின்றன. ஆனால் ஹர்பஜனின் நெருங்கிய நண்பர் ஒருவர், ‘நிச்சயம் கொரோனா பயம் இல்லை. முழுக்க தனிப்பட்ட காரணத்திற்காக ஹர்பஜன் விலகியிருக்கிறார். சம்பளம் எத்தனை கோடியாக இருந்தாலும், அதைத் தாண்டி அவரது மனைவி, குழந்தை அவருக்கு முக்கியம்’ என விளக்கம் கொடுத்திருக்கிறார்.
ஒரு போட்டியில் பங்கேற்பதும் விலகுவதும் ஒரு வீரரின் தனிப்பட்ட உரிமை. அதிலும், பெரும் தொகையை தியாகம் செய்துவிட்டு, குடும்பம் முக்கியம் என்பதும் போற்றத்தக்க விஷயம்! அதேசமயம் அணிக்கு நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் ஹர்பஜன், ரெய்னா போன்ற மூத்த வீரர்கள் விலகிச் செல்வது இளம் வீரர்களுக்கு என்ன மாதிரியான அவநம்பிக்கையை பரிமாறும் என்பதை கவனிக்க வேண்டும்.
கடினமான சூழலில், இளம் வீரர்கள் முழு ஈடுபாடு, அர்ப்பணிப்பை வெளிப்படுத்த உந்துதலாக இருக்க வேண்டியவர்கள் மூத்த வீரர்களே! அவர்களே களத்தை விட்டு விலகுவது, நிச்சயம் நம்பிக்கையின்மையை விதைக்கும்.
எனினும் அணியின் திறமை அடிப்படையிலான செயல்பாட்டை ரெய்னா, ஹர்பஜன் ஆகியோரது விலகல் பாதிக்காது என்பதே எதார்த்தம்! ஐபிஎல் ரன் குவிப்பு பட்டியலில் ‘டாப்’பில் இருப்பவர்தான் ரெய்னா. ஆனால் தேசிய அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு அவர் பெரிய அளவில் ஃபார்மில் இல்லை. ஒன் டவுனில் இறங்கும் அளவுக்கான பேட்டிங் பெர்ஃபார்மன்ஸை அவர் இழந்து வருடங்கள் ஆகிறது. எனவே அவரது விலகல் அம்பத்தி ராயுடு அல்லது வேறு ஒரு திறமையான வீரர் அந்த இடத்தை பயன்படுத்தும் வாய்ப்பை வழங்கும். ஏன், டோனியேகூட அந்த இடத்தை சில ஆட்டங்களில் பயன்படுத்தலாம்.
ஹர்பஜனைப் பொறுத்தவரை, ஐபிஎல் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 3-வது வீரர். சிக்கனமாக பந்து வீசிய வீரர்கள் பட்டியலிலும் அவர் இருக்கிறார். ஆனால் சீனியரான அவரை, கடந்த சீசனிலேயே சென்னையில் நடைபெற்ற போட்டிகளில் மட்டுமே டோனி பயன்படுத்தினார். எனவே இந்த முறை ஹர்பஜன், துபாய் போயிருந்தாலும் அவரை டோனி முழுமையாக பயன்படுத்துவாரா? என்பதை சொல்ல முடியாது.
ஒருவேளை சி.எஸ்.கே நிர்வாகமும், ஹர்பஜனும் இது தொடர்பாக தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்து, அதன் அடிப்படையில் ஹர்பஜன் விலகியிருக்கலாம் என்கிற கருத்தும் இருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.