CSK Tamil News, csk squad for ipl 2020: ஐபிஎல் போட்டியில் பங்கேற்கு சி.எஸ்.கே அணி கொரோனா பாதிப்பால் திணறுகிறது. இரு வீரர்கள் உள்பட அணி அங்கத்தினர்களாக உள்ள 13 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக தகவல் வெளியானதால், வெளிநாட்டு வீரர்கள் வருகை தருவார்களா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக், சர்வதேச அளவில் புகழ் பெற்ற கிரிக்கெட் தொடராக கருதப்படுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கும், இதில் பங்கேற்கும் வீரர்களுக்கும் பெரும் தொகையை அள்ளிக் கொடுக்கும் தொடரும்கூட. எனவே இந்திய வீரர்கள் மட்டுமல்லாமல், சர்வதேச வீரர்களும் இதில் பங்கேற்க ஆர்வம் காட்டுவதுண்டு.
இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக இந்தத் தொடரை இந்தியாவில் நடத்தவில்லை. சவூதி அரேபியா, துபாய், அபுதாபி ஆகிய இடங்களில் ரசிகர்கள் வருகை இல்லாமல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 10 வரை இந்தப் போட்டி நடைபெறும்.
கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் மோதிய அணிகள் என்ற அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன் அணியும் தொடக்க ஆட்டத்தில் மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் துபாய் போய்ச் சேர்ந்த சி.எஸ்.கே அணிக்கு அடி மேல் அடியாக கவலை தரும் செய்திகள் வந்தபடி இருக்கின்றன.
சொந்தப் பிரச்னை காரணமாக ‘சின்ன தல’ என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா நாடு திரும்பியிருக்கிறார். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அணி வீரர்கள் இருவர் உள்பட சி.எஸ்.கே குழுவில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்திருக்கின்றன.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் இரு வீரர்கள் தீபக் சாஹர், ரிதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் ஆவர். இவர்களில் தீபக் சாஹர் அணியின் முக்கியமான துருப்புச் சீட்டு. தொடக்க ஓவர்களிலும், இறுதி ஒவர்களிலும் சிக்கனமாகப் பந்து வீசி எதிரணிக்கு நெருக்கடி தரக்கூடியவர். அடுத்த இரு வாரங்களில் இவர் குணமானாலும்கூட, குவாரண்டைன் விதிமுறைகள் இருப்பதால் இவர் போட்டிகளில் பங்கேற்பது கேள்விக்குறி!
இதையும்விட, இன்னொரு அபாயம் வெளிநாட்டு வீரர்கள் வருகைதான்! வாட்சன் உள்பட ஓரிருவரே துபாய் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பிராவோ, ஹேசில்வுட், லுங்கி நிடினி, சாம் குர்ரன், பாப் டுபிளிசிஸ், இம்ரான் தாகிர், சாண்ட்னர் என இன்னும் முன்னணி விரர்கள் பலர் சி.எஸ்.கே.வுக்கு அவசியமாக இருக்கிறார்கள்.
தற்போதைய கொரோனா பீதி காரணமாக திட்டமிட்டபடி அவர்கள் வருகை தருவார்களா? என்கிற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இந்திய மூத்த சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன்சிங்கும் இன்னும் துபாய் போய்ச் சேரவில்லை. அவரும் செல்வாரா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஐபிஎல் சென்ற மற்ற அணிகள் அனைத்தும் கொரோனா அபாயத்தில் சிக்காமல் இருந்துகொள்ள, சி.எஸ்.கே மட்டும் சிக்கியது எப்படி? என்கிற விசாரணைகளும் நடக்கின்றன. சி.எஸ்.கே வீரர்கள் விமானத்திலும் தங்களது அறைகளிலும் சமூக விலகலை கடைபிடிக்காததே இதற்கு காரணம் என புகார் எழுந்திருக்கிறது. தவிர, ஆகஸ்ட் 15 முதல் 20 வரை சென்னையில் இவர்கள் பயிற்சி மேற்கொண்டபோது, முறையாக சமூக விலகல் நடவடிக்கைகளை மேற்கொண்டார்களா? என்கிற கேள்வியும் இருக்கிறது.
வெற்றி பெறும் வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றான சி.எஸ்.கே இப்படி கொரோனாவில் சிக்கியிருப்பது, ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"