CSK vs DC, IPL 2020 Today Match Tamil News: ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று சி.எஸ்.கே, டெல்லி கேப்பிடல் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் தோல்வியை தழுவிய விதம் தொடர்பாக டோனி மீது கடும் விமர்சனம் எழுந்த நிலையில் இன்றையப் போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. இதில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என பார்க்கலாம்.
ஐபிஎல் 2020 சீசன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்து வருகிறது. இதில் 7-வது போட்டி இன்று (25-ம் தேதி) இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கிறது. இதில் மகேந்திரசிங் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
முதல் ஆட்டத்தில் வலுவான மும்பை அணியை அனாயசமாக வென்ற சி.எஸ்.கே, தனது 2-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் மோசமாகத் தோற்றது. 203 ரன்களை துரத்த வேண்டிய நிலையில், சி.எஸ்.கே அணிக்காக ஃபாப் டு பிளிசிஸ் அபாரமாக விளையாடிக் கொண்டிருந்தார்.
அந்தக் கட்டத்தில் டோனி களம் புகாமல் ரிதுராஜ் கெய்க்வாட், கேதர் ஜாதவ் ஆகியோரை தனக்கு முன்னதாக களம் இறக்கினார். அவர்கள் சோபிக்கவில்லை. கடைசி கட்டத்தில் களம் இறங்கிய டோனியும் வெற்ரிக்கு முயற்சிக்காமல், அவர் சந்தித்த முதல் 13 பந்துகளில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் கடைசி ஒவரில் டோனி ஹேட்ரிக் சிக்ஸ் அடித்தும், சி.எஸ்.கே 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இதில் டோனியின் செயல்பாடு மெச்சும்படி இல்லை. முன்னாள் அதிரடி வீரர் ஷேவாக் இந்த ஆட்டத்தில் டோனியின் கேப்டன்ஷிப்புக்கு 10-க்கு 4 மதிப்பெண்களே வழங்குவதாக கூறினார். காம்பிர் உள்ளிட்ட வேறு சிலரும் டோனி முன்கூட்டியே களம் இறங்காததை விமர்சித்தனர். ஒரு அணியை முன்னின்று வழிநடத்தும் பாங்கு இதுவல்ல என கூறினர் பலரும்!
தவிர, சி.எஸ்.கே.வுக்கு தொடக்க ஜோடி இன்னும் ‘செட்’ ஆகவில்லை. ஷேன் வாட்சனும், முரளி விஜய்யும் இன்னும் நம்பிக்கையாக தோற்றமளிக்கவில்லை. முதல் ஆட்டத்தில் கலக்கிய அம்பத்தி ராயுடு காயத்தில் இருந்து குணமாகாததால் இன்றைய போட்டியிலும் களம் இறங்க வாய்ப்பு இல்லை. கடந்த ஆட்டத்தில் சி.எஸ்.கே ஸ்பின்னர்களான ரவீந்திர ஜடேஜா, பியூஷ் சாவ்லா ஆகியோரின் பந்துகளை ராஜஸ்தான் வீரர்கள் வெளுத்துவிட்டனர்.
சற்றே ஆறுதல் தருகிறவர்கள் ஃபாப் டுபிளிசிஸ், ஆல் ரவுண்டர் சாம் குர்ரன் ஆகியோர்தான். தீபக் சாஹர்கூட இன்னும் முழு ஃபார்முக்கு திரும்பவில்லை. லுங்கி நிகிடியும் ரன்களை வாரி இறைக்கிறார். எனவே சி.எஸ்.கே நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடந்த ஆட்டத்தில் சூப்பர் ஒவரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை விழ்த்தியது. பிரித்வி ஷா, ரிஷாப் பாண்ட், ஹெட்மேயர், கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் என அதிரடி வீரர்களைக் கொண்ட அந்த அணி நம்பிக்கையுடன் காணப்படுகிறது. அஷ்வின், இஷாந்த் சர்மா ஆகியோர் காயத்தால் அவதிப்படுவது மட்டுமே டெல்லி அணியின் பலவீனம்.
இந்த இரு அணிகளில் டெல்லி அணி இப்போதைய சூழலில் சற்றே வெற்றி வாய்ப்பு அதிகமான அணியாக கருதப்படுகிறது. எனினும் டி 20 ஆட்டத்தைப் பொறுத்தவரை மொத்தம் களத்தில் நிற்கும் 22 பேரில் ஏதாவது ஒரு வீரர் தனது அணியின் பக்கம் மொத்த வாய்ப்பையும் திசை திருப்பிவிட முடியும். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"