IPL 2023, Chennai Super Kings vs Delhi Capitals Weather Forecast Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் நாளை (புதன்கிழமை) இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) – டெல்லி கேபிடல்ஸ் (டி.சி) அணிகள் மோதவுள்ளன.
தொடர்ந்து மூன்று ஆட்டங்களில் வெற்றி பெறாமல் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வெற்றிப் பாதைக்குத் திரும்பியது. அந்த அணி தற்போது 11 ஆட்டங்களில் 5ல் வெற்றி பெற்று 11 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், லக்னோ அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டது.
மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியது, மும்பையை 20 ஓவர்களில் 139/8 என கட்டுப்படுத்த உதவியது. 140 ரன்களை துரத்திய சென்னை அணியில் தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் (30) மற்றும் டெவோன் கான்வே (44) ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை பெற உதவினார்கள்.
மறுபுறம், டெல்லி கேபிடல்ஸ் அதன் முந்தைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை (ஆர்.சி.பி) 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, மற்றொரு உறுதியான வெற்றியைப் பதிவு செய்ததது. இருப்பினும், இதுவரை 11 ஆட்டங்களில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
மிட்செல் மார்ஷ் தனது அற்புதமான பந்து வீச்சில் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 181/4 என கட்டுப்படுத்தினார். பதிலுக்கு, பிலிப் சால்ட் ஆர்சிபியின் பந்துவீச்சை நொறுக்கி அள்ளினார். அவர் வெறும் 45 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் எடுத்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற உதவினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் – பிட்ச் ரிப்போர்ட்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஆடுகளம், பேட் மற்றும் பந்திற்கு இடையே சமமான போட்டியை வழங்கும். சீமர்களுக்கு ஆரம்பத்தில் சில ஸ்விங் இருக்கும். அதே நேரத்தில் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும். பேட்டர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டும். ஆடுகளத்தின் நிலைமையை அவர்கள் பின்னர் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வானிலை முன்னறிவிப்பு
சென்னையின் சூழல் கிரிக்கெட் விளையாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். வெப்பநிலை 28 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளின் உத்தேச லெவன்
சென்னை சூப்பர் கிங்ஸ்:
சென்னை அணி அதன் முந்தைய ஆட்டத்தின் அதே லெவன் வீரர்களுடன் களமிறக்கக்கூடும். அவர்கள் சேஸிங் செய்தால் அம்பதி ராயுடுவை அவர்களின் இம்பாக்ட் பிளேயராக களமிறங்குவார்கள்.
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, மற்றும் மதீஷா பத்திரனா.
டெல்லி கேப்பிட்டல்ஸ்
அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வங்கதேச அணியில் முஸ்தாபிசுர் ரஹ்மான் இணைந்துள்ளார். அதனால் அவர் நாளைய ஆட்டத்தில் விளையாட வாய்ப்பில்லை.
டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், அமன் ஹக்கிம் கான், ரிபால் பட்டேல், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, இஷாந்த் சர்மா, கலீல் அகமது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil