IPL 2023 CSK vs DC Tamil News:16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரில் நாளை (புதன்கிழமை - மே.10) இரவு 7:30 சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் அரங்கேறும் 55வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
நடப்பு சீசனில் 13 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை அணி பிளேஆஃப்-க்கு முன்னேற மற்றும் தனது இடத்தை தக்க வைக்க இது மிகவும் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில், டெல்லி அணி தொடர்ந்து பிளேஆஃப் வைப்பில் இருக்க இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
பிட்ச் ரிப்போர்ட்
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள ஆடுகளத்தின் மேற்பரப்பு திடமாகவும் வறண்டதாகவும் உள்ளது. இதனால், அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். அவுட்ஃபீல்டில் குறைவான புல் கவரேஜ் உள்ளது. இது பேட்டர்களுக்கு சாதகமாக உள்ளது. ஆட்டம் முன்னேறும் போது ஆடுகளம் மெதுவான பந்துவீச்சாளர்களுக்கு உதவும். பேட்ஸ்மேன்களுக்கு அடிக்கடி ஸ்கோரை அடிப்பது சவாலாக இருக்கும். பந்து அவ்வளவு எளிதாக பேட்டிற்கு வராது. இங்கு டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யவே அதிக வாய்ப்புள்ளது.
நடப்பு சீசனில் இங்கு அடிக்கப்பட்ட முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 217 ஆகவும், 2வது இன்னிங்ஸ் ஸ்கோர் 205 ஆகவும் உள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறையும் 2வது பேட்டிங் செய்த அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
நேருக்கு நேர்
சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இதுவரை 27 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் சென்னை அணி 17முறையும், டெல்லி அணி 10 முறையும் வென்றுள்ளன.
சென்னை அணி எப்படி
கடைசியாக நடந்த 5 ஆட்டங்களில் சென்னை அணி 2ல் வெற்றி, ஒரு தோல்வி, ஒரு ஆட்டத்திற்கு முடிவு இல்லை என்று உள்ளது. சென்னை மண்ணில் நடந்த கடைசி ஆட்டத்தில் மும்பையை ஊதித்தள்ளியது சென்னை. அதனால், அதே உற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் சென்னை அணி களமாடும். முந்தைய ஆட்டங்களில் சென்னையின் பேட்டிங் வலுவாக இருந்தாலும், பந்துவீச்சு சுமாராகத்தான் இருந்தது.
ஆனால், தற்போது அவர்களின் பந்துவீச்சு வரிசை சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக தீபக் சாஹர், பத்திரனா மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் கடைசி ஆட்டத்தில் அதிரடியாக விக்கெட்டுகளை வீழ்த்தினர். சுழற்பந்து வீச்சு வரிசையில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மகேஷ் தீக்ஷனாவுடன் மொயீன் அலி கலக்கி வருகிறார். எனவே, சமபலம் பொருந்திய சென்னை டெல்லியை சாய்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி எப்படி?
ஆனால், கடைசி ஆட்டத்தில் பெங்களூருக்கு எதிராக அபார வெற்றி பெற்ற டெல்லி அணி சென்னையின் வெற்றிக்கு முட்டுக்கட்டை போடவே முயலும். அந்த ஆட்டத்தில் பெங்களூருவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது டெல்லி. கேப்டன் டேவிட் வார்னர், பில் சால்ட், மிட்செல் மார்ஷ் மற்றும் ரிலீ ரோசோவ் ஆகியோர் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அரைசதம் விளாசிய பில் சால்ட் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 87 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் அக்சர் படேல், முகேஷ் குமார், கலீல் அகமது, குலதீப் யாதவ், இஷாந்த் சர்மா போன்றோர் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளின் உத்தேச லெவன்:
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, சிவம் துபே, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர்), மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், மதீஷ பத்திரன, துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா.
டெல்லி கேப்பிடல்ஸ்
டேவிட் வார்னர், பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், அக்சர் படேல், மணீஷ் பாண்டே, அமன் ஹக்கீம் கான், குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது, ரிபால் படேல்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.