CSK vs GT IPL 2023 Tamil News: 16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் முதலாவது தகுதி சுற்றில் (குவாலிஃபயர் -1 ) நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது.
நடப்பு சீசனில் நடந்த லீக் சுற்றில் குஜராத் அணி 14 போட்டிகளில் 10 வெற்றிகளுடன் முதலிடத்தை பிடித்தது. மறுபுறம், சென்னை அணி 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. மார்ச் 31 அன்று நடந்த ஐபிஎல் 2023 தொடக்க ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் மோதிய நிலையில், குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது. தற்போது, குவாலிஃபையர் 1ல் மீண்டும் மோதுகின்றது. இந்த ஆட்டத்தில் வெற்றியை ருசிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோற்கும் அணிக்கு மே 26 அன்று நடைபெறும் குவாலிஃபையர் 2ல் விளையாடும்.
குஜராத் – சென்னை அணிகள் 2வது முறையாக நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராகி வரும் நிலையில், போட்டியில் அதிக ரன்களை எடுக்கக்கூடிய 3 வீரர்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.
டெவோன் கான்வே
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான கான்வே நடப்பு சீசனில் சென்னை அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரராக உள்ளார். லீக் சுற்றில் நடந்த 14 போட்டியிலும் களமாடிய அவர் 53.18 என்ற சராசரி மற்றும் 138.62 ஸ்ட்ரைக் ரேட்டில் 585 ரன்கள் எடுத்துள்ளார்.

குஜராத் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் கான்வே ஒரு ரன் மட்டுமே எடுத்து இருந்தார். அவர் தனது கடைசி நான்கு இன்னிங்ஸ்களில் 87, 30, 10 மற்றும் 44 ரன்கள் எடுத்துள்ளார். சென்னை மண்ணில் அவர் விளையாடிய 7 போட்டிகளில் 70 சராசரி மற்றும் 135.13 ஸ்ட்ரைக் ரேட்டில் 350 ரன்கள் எடுத்துள்ளார். தொடர்ந்து இன்றைய ஆட்டத்தில் அவர் ஜொலிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட்
இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரரான ருதுராஜ் சென்னை அணியில் தொடக்க வீரராக விளையாடி வருகிறார். 2021 சீசனில் தனது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவர் கடந்த சீசனில் சோபிக்க தவறி இருந்தார். இருப்பினும், இந்த சீசனில் தனது மிரட்டலான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி வருகிறார். மேலும், சென்னை அணிக்காக அதிக ரன் எடுத்த 2வது வீரராகவும், இந்த சீசனில் 500 ரன்களைக் கடந்த 8 வீரர்களில் ஒருவராகவும் அவர் இருக்கிறார்.

ருதுராஜ் தனது கடைசி நான்கு ஆட்டங்களில் 79, 17, 24 மற்றும் 30 ரன்கள் எடுத்துள்ளார். குஜராத் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அவர் 50 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார். சேப்பாக்கத்தில் நடந்த 7 போட்டிகளில், அவர் 29.71 சராசரியிலும் 139.59 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 208 ரன்கள் எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவரது அதிரடியை தொடர்வார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஷுப்மான் கில்
இந்திய கிரிக்கெட் அணியின் பட்டத்து இளவரசர் என அழைக்கப்படும் ஷுப்மான் கில் நடப்பு சீசனில் ரெட்-ஹாட் ஃபார்மில் இருக்கிறார். இந்த சீசனில் அடுத்தடுத்து 2 சதங்களை அடித்து மிரட்டிய அவர் குஜராத் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.

கில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 56.66 சராசரியிலும் 56.66 ஸ்ட்ரைக் ரேட்டிலும் 680 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல் 2023ல் அதிக ரன்களை குவித்த வீரர்களுக்கான ஆரஞ்சு தொப்பி போட்டியில், பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் (730) மட்டுமே அவரை விட அதிக ரன்கள் எடுத்தவராக உள்ளார்.
இந்த சீசனில் சென்னை அணிக்கு எதிரான முந்தைய போட்டியில், கில் 36 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். ஒட்டுமொத்தமாக, அவர் சென்னைக்கு எதிராக 11 போட்டிகளில் விளையாடி 25.90 சராசரி மற்றும் 129.50 ஸ்ட்ரைக் ரேட்டில் 259 ரன்கள் எடுத்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil