Advertisment

சி.எஸ்.கே vs குஜராத் ஃபைனல்: அங்கே கில், ரஷித் கான்; இங்கே பதிலடி கொடுப்பது யார்?

நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இருக்கும் 3 வீரர்களும் குஜராத் அணியின் வீரர்கள் என்பது பிரம்மிப்பை அளிக்கிறது.

author-image
Martin Jeyaraj
New Update
CSK vs GT IPL 2023 Final, Match Preview and Analysis in tamil

IPL 2023 Final - CSK vs GT

ச. மார்ட்டின் ஜெயராஜ் - Martin Jeyaraj

Advertisment

ஐ.பி.எல் 2023 கிரிக்கெட் திருவிழா இன்று ஞாயிற்றுகிழமையுடன் நிறைவடைகிறது. பொதுவாக நமது ஊர் திருவிழாக்களில் கடைசி நாள் தான் கச்சேரி, ஆடல் பாடல் என விழா களைகட்டும். மூத்தோர் முதல் இளையோர் வரை வரிசைகட்ட, பாடல் சத்தம் நாற்திசையிலும் எக்கோ அடிக்க, விசில் சத்தம் விண்ணை பிளக்கும். அவ்வகையில், லட்சத்திற்கு அதிகமான ரசிகர்கள் திரளவிருக்கும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சீசனின் இறுதிப்போட்டி கோலாகலமாக அரங்கேற உள்ளது. இதில், சாம்பியன் பட்டத்தை வாகை சூட 4 முறை சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மல்லுக்கட்டுகிறது.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்த இரு அணிகள் தான் நடப்பு சீசனில் இதே அகமதாபாத் மண்ணில் நடந்த தொடக்க ஆட்டத்திலும் மோதின. இதில் தோல்வி கண்ட சென்னை அதன் கோட்டையான சேப்பாக்கத்தில் வைத்து குவாலிபையர் 1ல் குஜராத்துக்கு பதிலடி கொடுத்து அனுப்பியது. ஆனால், குவாலிபையர் 2ல் மும்பையை தனது கோட்டையில் (அகமதாபாத்) வைத்து வெளுத்து வாங்கிய குஜராத் சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க மீண்டும் சென்னையுடன் மல்லுக்கட்ட ஆயத்தமாகியுள்ளது.

publive-image

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் நடப்பு சீசனில் மிகவும் வெற்றிகரமான அணிகளுள் ஒன்றாக வலம் வருகிறது. லீக் சுற்றில் 10 வெற்றி 4 தோல்வியுடன் கம்பீர நடைபோட்டது. அந்த அணிக்கு வலுவான தொடக்கத்தை அதன் தொடக்க ஜோடியான விருத்திமான் சாஹா - சுப்மன் கில் கொடுக்கவில்லை என்றாலும், கில் தனது அதிரடி ஆட்டத்தால் 'தனிஒருவனாக' உருவெடுத்துள்ளார். ரன்குவிக்கும் எந்திரமாக மாறிப்போயிருக்கும் அவர் 851 ரன்களை குவித்துள்ளார். 78 பவுண்டரிகளையும், 33 சிக்ஸர்களையும் பறக்கவிட்டுள்ளார்.

publive-image

இந்த சீசனில் மட்டும் 3 சதங்களையும் விளாசியிருக்கிறார். மும்பை அணிக்கு எதிரான குவாலிபையர் 2 ஆட்டத்தில் ருத்தரதாண்டவம் ஆடிய கில் 60 பந்துகளில் 129 ரன்கள் வரை குவித்தார். எனவே, அவரது அதிரடியான தொடக்கத்தைத் தான் குஜராத் அணி மலைபோல் நம்பி இருக்கிறது. இதே போல் விஜய் சங்கர், சாஹா, சாய் சுதர்சன் ஆகியோரும் டாப் ஆடரில் வலு சேர்க்கிறார்கள். மிடில் ஆடரில் ராகுல் தெவாடியா மற்றும் டேவிட் மில்லர் போன்றோரும் கை கொடுக்கின்றனர்.

நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் வரிசையில் இருக்கும் 3 வீரர்களும் குஜராத் அணியின் வீரர்கள் என்பது பிரம்மிப்பை அளிக்கிறது. 28 விக்கெட்டுகளுடன் முகமது ஷமி முதல் இடத்திலும், 27 மற்றும் 24 விக்கெட்டுகளுடன் ரஷித் கான் மற்றும் மோஹித் ஷர்மா 2வது மற்றும் 3வது இடத்திலும் உள்ளனர். புதிய பந்தை சுழல விடும் ஷமியின் திறமையை, மிடில் ஓவர்களில் ஸ்லோயர் பந்துகளை வீசும் மோஹித்தின் சாதுர்யம், ரஷித்தின் லெந்த், வேகம் மற்றும் மாறுபாடுகள், நெருக்கடி கொடுக்கும் நூர் அகமது என பந்துவீச்சில் மிரட்டுகிறது குஜராத்.

publive-image

கேப்டன் ஹர்திக் பாண்டியா கடந்த சீசனில் இருந்ததைப் போல இந்த ஆண்டில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஜொலிக்கவில்லை என்றாலும், தனது தலைமையிலான அணியை தொடர்ந்து இரண்டாவது முறையை ஐ.பி.எல் இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்துள்ளார். தனது அணி வீரர்களுக்கு நம்பிக்கையையும், தெளிவையும் கொடுத்துள்ளார். அது அவர்களுக்கு கூடுதல் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது.

எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் நடப்பு சீசனில் 17 புள்ளிகளுடன் 2வது இடத்தை பிடித்தது. எனினும், முதலிடம் பிடித்த குஜராத்தை குவாலிபையர் 1ல் காலி செய்தது. சென்னையின் பேட்டிங்கை பொறுத்தவரையில், தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் - டெவோன் கான்வே ஜோடி தூண்களாக உள்ளனர். இந்த ஜோடி நடப்பு சீசனில் 14 போட்டிகளில் 775 ரன்கள் சேர்த்துள்ளனர். இது இந்த சீசனில் ஒரு தொடக்க ஜோடியின் இரண்டாவது அதிகபட்சமாகும். இருவரும் பவர்பிளே அதிரடி காட்டினால் சென்னைக்கு சாதமாக முடிவுகள் கிடைக்கிறது. எனவே, இன்றைய ஆட்டத்திலும் அவர்கள் ரன்வேட்டை நடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, மொயின் அலி போன்ற வீரர்களில் ஒருவர் நிலைத்து நின்று ஆடினால் சென்னையின் ஸ்கோர் எங்கோ சென்று விடும். ஆதலால் அவர்களும் இன்று ஜொலிக்கப்பார்கள் என நம்பலாம். அணியின் 'ஆறு'ச்சாமியாக வலம் வரும் துபே மிடில் ஓவர்களில் வந்து சிக்ஸர்களை பறக்கவிட்டு எதிரணியை நடுங்க செய்கிறார். அவரது கவனம் சிக்ஸர்களை பறக்கவிடுவதில் இருப்பதால் சில சமயம் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்கிறார். அதை தவிர்த்து, வழக்கம் போல் தனது வாளை வீசி சில சிக்ஸர்களால் வான வேடிக்கை காட்ட வேண்டும்.

வேகப்பந்து வீச்சாளர்களான துஷார் தேஷ்பாண்டே மற்றும் மதீஷா பத்திரனாவின் பரிணாமம் இந்த ஆண்டு அணியின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது. இவர்கள் இருவரும் இதுவரை 38 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியில் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் வரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். சுழலில் ரவீந்திர ஜடேஜா மற்றும் மஹீஷ் தீக்ஷனா மிரட்டுவார்கள் என்று நம்பலாம்.

சென்னை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர் இந்த சீசனில் தொடை காயம் காரணமாக முதல் 6 ஆட்டங்களைத் தவறவிட்டார். ஆனால் அவர் அணிக்கு திரும்பிய பிறகு உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தினார். குவாலிபையர் 1ல், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, சாஹர் 29 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை எடுத்தார். இதில் குஜராத் அணியின் தொடக்க வீரர்களான விருத்திமான் சாஹா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோரின் விக்கெட்டுகள் அடங்கும். இன்றும் இந்த தொடக்க ஜோடியை உடைத்து அணிக்கு நல்ல தொடக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

publive-image

கேப்டன் தோனிக்கு இந்த சீசன் முழுவதும் இடது முழங்காலில் பிரச்சனை இருந்தது. ஆனால் அது அவரது கேப்டன்சி அல்லது பேட்டிங்கை பாதிக்கவில்லை. களத்தில் அவர் தனது பந்துவீச்சாளர்களை கொண்டு புத்திசாலித்தனமான பீல்ட் செட்அப் செய்து விக்கெட்டுகளை கைப்பற்ற உதவினார். பெரும்பாலும் கடைசி ஓவர்களில் பேட்டிங் செய்ய களம் புகும் அவர் 11 இன்னிங்ஸில் 180+ ஸ்ட்ரைக் ரேட்டில் 104 ரன்கள் எடுத்துள்ளார். கேப்டனாக பல வெற்றி தோல்விகளை கடந்துள்ள அவர் எப்போதும் போல அணியை திறம்பட வழிநடத்தி, கோப்பை மீண்டும் ஒருமுறை முத்தமிட வேண்டும் என்பதே பல லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவாக உள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Cricket Sports Ms Dhoni Hardik Pandya Chennai Super Kings Gujarat Titans Ipl Finals Ipl News Ipl Cricket Ahmedabad Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment