MS Dhoni – Matheesha Pathirana Tamil News: 16வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த முதலாவது தகுதி சுற்றில் (குவாலிஃபயர் -1 ) நடப்பு சாம்பியயான குஜராத் டைட்டன்ஸ் – 4 முறை சாம்பியயான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் குஜராத்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னையை அணி 10வது முறையாக ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
நடுவரிடம் வாக்குவாதம் – ஆட்டத்தை நிறுத்திய தோனி
இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்று வீரராக வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா சேர்க்கப்பட்டார். அவர் ஒரு கட்டத்தில் மைதானத்தை விட்டு வெளியேறி 9 நிமிடங்கள் கழித்து மீண்டும் உள்ளே வந்தார். அவரை பந்துவீச கேப்டன் டோனி அழைத்த போது, கள நடுவர் தடுத்து நிறுத்தினார். இப்போது தான் அவர் களத்திற்கு வந்திருக்கிறார். எனவே உடனடியாக அவரை பந்து வீச அனுமதிக்க முடியாது என்று நடுவர் கூறியிருக்கிறார். இதனால் அதிருப்திக்குள்ளான தோனி மற்றும் சக வீரர்கள் நடுவரிடம் சில நிமிடங்கள் வாதிட்டனர். பிறகு நடுவரின் சம்மதத்துடன் அந்த ஓவரை பத்திரனா வீசினார்.

சரியான அணுகுமுறையா?
இந்நிலையில், நேற்றைய போட்டியில் ஆங்கில வர்ணனையில் இருந்த பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, “அது எனக்குப் புரியவில்லை. இதற்கு கண்டிப்பாக விளக்கம் தேவை.
அவர் 4 நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தார் என்றால், போட்டியை இடைமறித்து, அவருக்குப் பதில் வேறு யாராவது ஒருவரை பந்துவீச செய்ய வேண்டும்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய நியூசிலாந்து அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டவுல், “நடுவர்களுடன் அவரது 5 நிமிட வாக்குவாதம் தேவையற்றது. அவர் செய்ததெல்லாம், மற்றொரு பந்துவீச்சாளரைப் பந்துவீச விடாமல் ஆட்டத்தை நிறுத்தியதுதான். போட்டியின் முடிவில் அவர் வருத்தப்படலாம்.” என்று கூறினார்.

‘ஸ்லோ ஓவர் ரேட்’ – தியாகம் செய்த தோனி
முன்னதாக, பத்திரனா 9 நிமிடங்கள் கழித்து தான் பந்துவீச முடியும் என களநடுவர்கள் குறிப்பிட்ட நிலையில், தோனி மற்றும் சென்னை அணியின் வீரர்கள் நடுவர்களுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தனர். 5 நிமிடங்கள் கடந்த பின்னர் பத்திரனா மீண்டும் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். தோனி, இந்த ஓவரை பத்திரனா தான் வீச வேண்டும் என உறுதியாக இருந்ததால், அணியின் ஸ்லோ ஓவர் ரேட்டை தியாகம் செய்ய அவர் தயாராக இருந்தார் என்று நம்பப்படுகிறது.
இந்த தாமதம் காரணமாக, சென்னை தங்கள் 20 ஓவர்களை ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்கவில்லை, கடைசி ஓவரின் போது 30 யார்டு வட்டத்திற்கு வெளியே ஒரு குறைவான பீல்டரை வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஸ்லோ ஓவர் ரேட் என்றால் என்ன?
ஸ்லோ ஓவர் ரேட் என்பது, பீல்டிங் செய்யும் அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் (காலக்கெடுவுக்குள்) 20 ஓவர்களை வீச முடியாமல் போனால் ஸ்லோ ஓவர் ரேட் நடைமுறைக்கு வரும். அப்போது மீதமுள்ள டெத் ஓவர்களுக்கு மேலும் ஒரு கூடுதல் பீல்டர் 30 யார்டு வட்டத்திற்குள் இருக்க வேண்டும். பொதுவாக ஐ.பி.எல் பீல்டிங் செய்யும் அணி 90 நிமிடங்களுக்குள் 20 ஓவர்களை வீச வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil