CSK vs RCB | Chennai Super Kings | Royal Challengers Bangalore | IPL 2024: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் 2024) டி-20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நாளை வெள்ளிக்கிழமை கண்கவர் கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் - பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
நேருக்கு நேர்
இந்நிலையில், ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், சென்னை அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. அதே நேரத்தில் பெங்களூரு அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான போட்டி 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க ஆண்டில் முதல்முறையாக மோதியது. எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது.
கடந்த சீசனில் இவ்விரு அணிகள் மோதிய கடைசி ஆட்டத்தில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதேபோல், இந்த அணிகள் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று சென்னை அணி அபாரமாக உள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 22), சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி) அணிகள் 32வது முறையாக மோத உள்ளன. பலம் பொருந்திய இவ்விரு அணிகள் மோதும் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் இன்று நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“