10 அணிகள் பங்கேற்கும் 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெறுகிறது. இதற்காக அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை மற்றும் புனே ஆகிய 10 நகரங்களில் உள்ள மைதானங்களை புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
உலகக் கோப்பை அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) சமீபத்தில் வெளியிட்ட நிலையில், இந்திய அணியின் முதல் ஆட்டம், அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில், ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
மொகாலி மைதானம் புறக்கணிப்பு
உலகக் கோப்பை தொடரை நடத்தும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) 10 மைதானங்களில் மட்டும் போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது. இதனால், மொகாலி, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி மற்றும் நாக்பூர் போன்ற சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் போட்டிகள் நடத்தும் வாய்ப்பை இழந்துள்ளன. இது மத்தியப் பிரதேச கிரிக்கெட் சங்கம் (MPCA) மற்றும் பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் (PCA) அதிகாரிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு அமைச்சர் கடிதம்
இந்நிலையில், பஞ்சாப் விளையாட்டுத் துறை அமைச்சர் குர்மீத் சிங் மீட் ஹேயர் நேற்று வெள்ளிக்கிழமை பி.சி.சி.ஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஐசிசி உலகக் கோப்பையின் போது போட்டிகளை நடத்தும் நகரங்களின் பட்டியலிலிருந்து மொகாலி எந்த அளவுகோலின் கீழ் விலக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பிடத்தக்க இந்திய மைதானங்களில் ஒன்றான மொகாலி, 1996 (ஆஸ்திரேலியா vs வெஸ்ட் இண்டீஸ்) மற்றும் 2011 (இந்தியா vs பாகிஸ்தான்) ஆகிய இரண்டு ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளை நடத்தியது. ஐசிசி மற்றும் பிசிசிஐ உலகக் கோப்பை அட்டவணையை அறிவித்ததிலிருந்து, சில எதிர்க்கட்சித் தலைவர்கள் போட்டிகளை திட்டமிடுவதில் அரசியல் தலையீடு இருப்பதாகக் குற்றம் சாட்டி இருந்தனர்.
அமைச்சர் குர்மீத் சிங் மீட் பி.சி.சி.ஐ தலைவருக்கு எழுதிய கடிதத்தில், பஞ்சாபில் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்பு உள்ளது என்றும், மொகாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியம் இரண்டு உலகக் கோப்பை அரையிறுதி போட்டிகளை நடத்திய பெருமையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
"கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு மொகாலி தகுதியற்றதாக கருதப்படும் ஐசிசியின் அளவுகோல் என்ன என்பதை அறிய விரும்புகிறேன். இது தவிர, 2022 செப்டம்பரில் இந்தியா-ஆஸ்திரேலியா சர்வதேச டி20 போட்டி நடத்தப்பட்டதால், தற்போது விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும். தவிர, இரண்டு அரையிறுதிகள் உட்பட ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளும் கடந்த காலங்களில் விளையாடப்பட்டன. தரநிலைகளை ஆய்வு செய்ய ஐசிசி குழு மொகாலி மைதானத்திற்கு சென்றதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
மொஹாலி ஸ்டேடியம் இந்தியாவில் உள்ள சிறந்த மைதானங்களில் ஒன்று மட்டுமல்ல, உலகின் முக்கிய மைதானங்களின் பட்டியலிலும் வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களின் முதல் சாய்ஸ் மொகாலிதான். மொகாலியில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது மற்றும் நகரத்தில் சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் அணிகள் தங்குவதற்கு போதுமான ஹோட்டல்கள் உள்ளன.
பஞ்சாப் அதன் பழங்கால மரபுகளான ஒப்பற்ற துணிச்சல், ஒப்பிடமுடியாத விருந்தோம்பல் மற்றும் மதச்சார்பற்ற கொள்கைகளில் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றிற்காக உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளது. பஞ்சாப் வீரர்கள் விளையாட்டு அரங்கிலும், தேசத்தின் முன்னணி மற்றும் கொடி ஏந்திய பெருமையைப் பெற்றுள்ளனர்.
கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, லாலா அமர்நாத், பிஷன் சிங் பேடி, மொஹிந்தர் அமர்நாத், யஷ்பால் சர்மா, மதன் லால், நவ்ஜோத் சிங் சித்து, ஹர்பஜன் சிங், யுவராஜ் சிங், ரீதிந்தர் சோதி, தினேஷ் மோங்லா, ஹர்விந்தர் சிங் போன்ற ஜாம்பவான்களை உருவாக்கிய பெருமை பஞ்சாப் அணிக்கு உண்டு. விக்ரம் ரத்தோர், சரண்தீப் சிங் மற்றும் இளம் வீரர்களான ஷுப்மான் கில் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் உள்ளனர். மிகவும் அவசரமான இந்த விஷயத்தில் பஞ்சாபிற்கு நீதி கிடைக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று அமைச்சர் குர்மீத் சிங் மீட் தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil