காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் லாதர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார்.
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி, ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டில் நேற்றுமுன்தினம் துவங்கியது. இப்போட்டியில் 71 நாடுகளைச் சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 பேர் களம் கண்டுள்ளனர். இந்த காமன்வெல்த் போட்டிக்கு “கோல்ட் கோஸ்ட் 18” என்று பெயர் சூட்டப்பட்டது.
முதல் நாளில், இந்திய வீரர் குருராஜா பளுதூக்கும் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இரண்டாம் நாளான நேற்று, மகளிருக்கான பளுதூக்குதல் 53 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சஞ்சிதா பானு தங்க பதக்கம் வென்று அசத்தினார். நேற்று, இந்தியாவுக்கு ஒரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளிப்பதக்கமும் கிடைத்தது.
இந்த நிலையில், இன்று நடைபெற்ற ஆண்களுக்கான பளுதூக்குதல் 69 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் தீபக் லாதர் வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். இப்போட்டியில் மொத்தம் 295 (136+159) கிலோ எடையை தூக்கிய தீபக் லாதர் இந்தியாவுக்கு நான்காவது பதக்கத்தை பெற்றுத் தந்தார்.
ஹரியானாவைச் சேர்ந்த தீபக்கின் வயது 18. இதன் மூலம், மிக இள வயதில் காமன்வெல்த் விளையாட்டில் பளுதூக்குதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை தீபக் பெற்றுள்ளார்.