சர்வதேச செஸ் கூட்டமைப்பான ஃபிடே சார்பில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடந்து வந்தது. இந்தப் போட்டியில் கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெற்ற உலகின் நம்பர்-5 வீரரான இந்தியாவின் குகேஷ் (18) மற்றும் நடப்பு உலக சாம்பியனும், உலகின் நம்பர்-15 வீரரான சீனாவின் டிங் லிரென் (32) ஆகியோரும் மோதினர்.
மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்தப் போட்டியில், மொத்தம் 14 சுற்று நடைபெற்றது. முதலில் 7.5 புள்ளி பெறும் வீரர், உலக சாம்பியன் ஆகலாம். மொத்த பரிசுத் தொகை ரூ. 21 கோடி. முதல் சுற்றை டிங் லிரென் வென்ற நிலையில், இரண்டாவது சுற்று 'டிரா' ஆனது. தொடர்ந்து நடந்த மூன்றாவது சுற்றில் எழுச்சி கண்ட குகேஷ் வெற்றி பெற்றார். தொடர்ந்து நடந்த 4, 5, 6, 7,8,9,10 சுற்றுகள் 'டிரா' ஆனது.
இதன்பின்னர், 11-வது சுற்றில் குகேஷ் டிங் லிரெனை வென்றார். 12-வது சுற்றில் டிங் லிரென் குகேஷை வென்றார். இதனால், 12 போட்டிக்குப் பிறகு தலா 2 வெற்றிகளுடன் இருவரும் சமநிலையில் இருந்தனர். தொடர்ந்து நடந்த 13-வது சுற்று டிராவில் முடிந்தது. இதனையடுத்து, கடைசி சுற்றில் வெற்றி பெறும் வீரர் சாம்பியன் பட்டத்தை தட்டிச் செல்வார். இதுவும் டிராவில் முடிந்தால், அதன் பிறகு வெற்றியாளரை தீர்மானிக்க அதிவேகமாக காய்களை நகர்த்தும் சுற்று அடங்கிய டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்படும் எனும் நிலை இருந்தது.
இந்த நிலையில், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடைபெற்றது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். இருவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். போட்டி சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்தது. தொடக்கம் முதலே இருவரும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், டிராவை நோக்கியே போட்டி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. குகேஷ் வெற்றி பெறுவது கடினம் என்றும், போட்டி டிராவை நோக்கியே செல்லும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சற்றும் எதிர்பாரா வகையில், 58-வது நகர்த்தலில் டிங் லீரெனை வீழ்த்தி குகேஷ் வெற்றி பெற்றார். டிங் லீரென் செய்த சிறிய தவறை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட குகேஷ் வெற்றிபெற்று அசத்தினார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் வரலாறு படைத்துள்ளார். வெற்றி பெற்ற மகிழ்ச்சியின் குகேஷ் ஆனந்த கண்ணீர் விட்டார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. வெற்றி பெற்றுள்ள குகேஷுக்கு இந்திய மதிப்பில் ரூ. 20.8 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படுவது உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“