உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் இன்று திங்கள்கிழமை சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அகில இந்திய செஸ் கூட்டமைப்பு மற்றும் குகேஷ் படித்த தனியார் பள்ளியின் சார்பில் முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த குகேஷ், “உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது எனது கனவு. இளம் வயதில் சாம்பியன் ஆனதில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. போட்டி முழுவதும் நிறைய ஏற்ற இறக்கங்கள் இருந்தன. 14 சுற்றுகள் கொண்ட போட்டியில் சில பின்னடைவுகள் இருக்கும் என்பதும் தெரியும். அதை நான் எதிர்கொள்ளத் தயாராக இருந்தேன்.
வெற்றி பெற்ற தருணம் உணர்வுபூர்வமாக இருந்தது. செஸ் மிகவும் அழகான விளையாட்டு. அதை அழுத்தம் இல்லாமல் அணுக வேண்டும். இந்த வெற்றியோடு எதுவும் முடிந்துவிடவில்லை. இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டியிருக்கிறது” என்று அவர் கூறினார்.
செய்தி: சக்தி சரவணன் - சென்னை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“