Pro Kabaddi League: 10-வது புரோ கபடி லீக் திருவிழா கடந்த 2ம் தேதி தொடங்கி இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தபாங் டெல்லி - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதுகின்றன
இதனைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெற உள்ள மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் - புனேரி பால்டன் அணிகள் மோதுகின்றன.
டெல்லியிடம் போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்
இன்றைய முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தபாங் டெல்லி அணிகள் மோதின. ஆறுதல் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கிய தமிழ் தலைவாஸ் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தியது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளைப் பெற்று முன்னிலை பெற்று வந்தன. இறுதியில் தபாங் டெல்லி 2 புள்ளிகள் வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
டெல்லி அணி 45 புள்ளிகளையும், தமிழ் தலைவாஸ் 43 புள்ளிகளையும் எடுத்தன. டெல்லி அணியில் அதிகபட்சமாக அஷூ மாலிக் 18 புள்ளிகளை எடுத்தார். தமிழ் தலைவாஸ் அணியில் அதிகபட்சமாக நரேந்தர் 18 புள்ளிகளை எடுத்தார்.
பெங்கால் வாரியர்ஸை வீழ்த்திய புனேரி பால்டன்
இன்றைய இரண்டாவது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதல் பாதியில் புனேரி பால்டன் ஆதிக்கம் செலுத்தியது. பெங்கால் அணி புள்ளிகளை பெற முடியாமல் பின் தங்கி இருந்தது. இருப்பினும் இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்கால் அணி விரைவாக புள்ளிகளை சேர்த்தது. இருப்பினும் இறுதியில் புனேரி பால்டன் 3 புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
பெங்கால் வாரியர்ஸ் 26 புள்ளிகளையும், புனேரி பால்டன் 29 புள்ளிகளையும் எடுத்தன. பெங்கால் அணியில் அதிகபட்சமாக நிதின் குமார் 5 புள்ளிகளை எடுத்தார். புனேரி பால்டன் அணியில் அதிகபட்சமாக ஆகாஷ் 10 புள்ளிகளையும், பங்கஜ் 6 புள்ளிகளையும் எடுத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“