worldcup 2023 | australia-vs-new-zealand | david-warner: 13-வது ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இமாச்சல பிரதேசம் மாநிலம் தர்மசாலாவில் இன்று (சனிக்கிழமை) காலை 10:30 மணிக்கு தொடங்கிய 27வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 388 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 109 ரன்களும், டேவிட் வார்னர் 81 ரன்களும் எடுத்தனர்.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி தரபபில் க்ளென் பிலிப்ஸ் மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர் 2 விக்கெட்டுகளையும், மாட் ஹென்றி மற்றும் ஜேம்ஸ் நீஷம் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார். தற்போது 389 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை நியூசிலாந்து துரத்தி வருகிறது.
2 பந்தில் 21 ரன் -வானவேடிக்கை காட்டிய வார்னர், டிராவிஸ்
இந்நிலையில், இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர்களாக களமாடிய டேவிட் வார்னர் - டிராவிஸ் ஹெட் ஜோடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இந்த ஜோடி முதல் 2 ஓவர்களுக்கு 14 ரன்கள் எடுத்தனர். 3வது ஓவரை நியூசிலாந்தின் மாட் ஹென்றி வீச வந்தார். அவரது முதல் பந்தை ஸ்கொயர் லெக் திசையில் வார்னர் சிக்ஸர் பறக்கவிட்டார்.
2வது பந்தில் வார்னர் ஒரு ரன் எடுத்தார். அந்த பந்து 'நோ -பால்' என அறிவிக்கப்பட்டது. ஃப்ரீ ஹிட் பந்தை எதிர்கொண்ட டிராவிஸ் ஹெட் சிக்ஸர் விளாசினார். ஆனால், அந்தப் பந்தையும் ஹென்றி 'நோ -பால்' ஆக வீசி இருந்தார். மீண்டும் ஃப்ரீ ஹிட் கொடுக்கப்பட்ட நிலையில், டிராவிஸ் ஹெட்-டுக்கு பவுன்சராக பந்தைப் போட்டார் ஹென்றி. அதனையும் வளைத்து அடித்து மீண்டும் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் ஹெட். மொத்தமாக முதல் 2 பந்துகளில் வார்னர் - ஹெட் ஜோடி 21 ரன்களை எடுத்து அசத்தினர்.
இதுதொடர்பான வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.