ஸ்ரீலீலா கதாநாயகியாக நடித்துள்ள படம் "ராபின்ஹுட்". நிதின் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை வெங்கி குடுமுலா எழுதி இயக்கி இருக்கிறார். ராஜேந்திர பிரசாத், ஷைன் டாம் சாக்கோ, வெண்ணேலா கிஷோர், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். மேலும் இப்படத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் 28-ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் வார்னர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
ஐதராபாத்தில் நடைபெறும் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மற்றும் பிரீ-ரிலீஸ் நிகழ்ச்சியில் டேவிட் வார்னர் கலந்து கொள்கிறார். இதில் கலந்துகொள்வதற்காக தற்போது ஐதராபாத் வந்திருக்கிறார் டேவிட் வார்னர்.
இதனிடையே, விமானியே இல்லாததால் ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் வார்னர் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " விமானத்தை இயக்க விமானி இல்லை எனத் தெரிந்தும் ஏன் பயணிகளை உள்ளே ஏறச் சொல்கிறீர்கள்?" என காட்டமாகத் தெரிவித்திருக்கிறார். மோசமான வானிலை காரணமாகவே விமானம் தாமதமனதாக ஏர் இந்தியா நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது.