David Warner Tamil News: கிரிக்கெட் ரசிகர்களை மைதானத்திற்கு உள்ளேயும், வெளியேயும் இருந்து குஷிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களில் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னருக்கு முக்கிய இடம் உண்டு. கொரோனா ஊரடங்கு கால கட்டத்தில் சமூக வலைத்தளங்களில் இவர் செய்த சேட்டைகள் கொஞ்ச நஞ்சமல்ல. ‘டிக்டோக்’ பக்கத்தில் இவரின் குடும்பத்தினரோடு செய்த வீடியோக்கள் ஒரு பக்கம் வைரலாக, தமிழ் மற்றும் தெலுங்கு முன்னணி நடிகர்களின் முகத்தை ‘மார்பிங்’ செய்து இவர் பதிவிட்ட வீடியோக்கள் மறுபக்கம் இணையத்தை தெறிக்க விட்டன. குறிப்பாக இவரின் புட்டா பொம்மா… புட்டா பொம்மா, தனுஷின் ரவுடி பேபி, வீடியோகள் பல மில்லியன் பார்வையார்களை கடந்தன.
இந்தியாவில் டிக்டாக் தளம் தடை செய்யப்பட்ட நிலையில், வார்னர் தனது சேட்டைகளை இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவில் தொடர்ந்து வருகிறார். சமீபத்தில் அவர், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளி வர உள்ள புஸ்பா 2 படத்தின் போஸ்டரை மார்பிங் செய்து புகைப்படமாக வெளியிட அது இணைய பக்கங்களில் வைரலாகியது. இதேபோல் அவர் ‘ஐ’ படம் விக்ரம், பதான் பட ஷாரு கான் என முன்னணி நடிகர்களின் முகங்களை மார்பிங் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.
தெலுங்கு படத்தில் வில்லன்
இந்நிலையில், தற்போது, ஐ.பி.எல் தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தி வரும் டேவிட் வார்னர், மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோருடன் இணைந்து, தெலுங்கு ஸ்பை த்ரில்லர் படத்தில் வில்லனாக நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கவுரவ் கபூர் தொகுத்து வழங்கிய பிரேக்ஃபாஸ்ட் வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பேசிய வார்னர், எனது கனவு நடிகர்கள் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆவார்கள்.
டிக்டாக் என்றால் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. எல்லாரும் பல ஆண்டுகளாக அதில் இருந்தனர். எனவே நானும் ஸ்க்ரோலிங் செய்யலாம் என நினைத்தேன். கோவிட் தாக்கம் தொடங்கியது. அப்போது நானும் டிக்டாக்-கில் இணைந்தேன். அதில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என உணர்ந்தேன்.
யாரோ ஒருவர் என்னிடம் ‘உங்களால் ஒரு பாடலுக்கு நடனம் செய்ய முடியுமா?’ என்று கேட்டார். எனக்கு ‘ஷீலா கி ஜவானி’, ‘மை தேரா ஹீரோ’ மற்றும் ‘சம்மக் சல்லோ’ ஆகிய பாடல்கள் மட்டுமே தெரியும். இந்த மூன்று பாடல்கள் மட்டுமே எனக்குத் தெரியும். எனவே, நாங்கள் ‘ஷீலா கி ஜவானி’ பாடலுக்கு நடனம் செய்தோம், அதன் பிறகு மில்லியன் கோரிக்கைகள் வந்தன.
அப்போது தான், ஐதராபாத் ரசிகர்கள் ‘உங்களால் புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் செய்ய முடியுமா?’ என்று கேட்டுக்கொண்டதால், நாங்கள் அதைச் செய்தோம், அது பலமாகிவிட்டது.” என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil