பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினேஷ் போகத் மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: “ மல்யுத்தம் என்னை போட்டியிட்டு வென்றுவிட்டது. நான் தோற்றுவிட்டேன். என்னுடைய உத்வேகம் அனைத்தும் உடைந்துவிட்டது. என்னிடம் இப்போது எந்த வலிமையும் இல்லை. 2001- 2024 மல்யுத்தத்துக்கு குட் பை” என்று பதிவு செய்துள்ளார்.
மல்யுத்த இறுதிபோட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா சாரா என் ஹில்டெப்ரண்டுடன் மோத இருந்தார் வினேஷ் போகத். இந்த ஆட்டம் நேற்று இரவு நடக்க இருந்தது. முன்னதாக காலை 9 மணி அளவில் வினேஷ் போகத்துக்கு எடை தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் இவரது உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
3வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத் பதக்கம் வெல்வார் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில், இந்த தகுதி நீக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதைத் தொடர்ந்து மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெருவதாக அவர் அறிவித்துள்ளது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.