scorecardresearch

பதிலடி கொடுக்குமா சென்னை? குவாலிஃபைர் சுற்றில் டெல்லியுடன் மோதல்!

IPL Quaifier 1 lineup CSK faces DC Tamil News: பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை நடக்கும் முதலாவது குவாலிஃபைர் சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன

பதிலடி கொடுக்குமா சென்னை? குவாலிஃபைர் சுற்றில் டெல்லியுடன் மோதல்!

IPL 2021 Qualifier DC VS CSK Tamil News: 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்த டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் லீக் சுற்றுடன் நடையை கட்டியுள்ளன.

இந்நிலையில், பிளே-ஆப்க்கு தகுதி பெற்று புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்துள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு துபாயில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று (குவாலிஃபைர் – 1) ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும். தோல்வி அடையும் அணிக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும்.

பதிலடி கொடுக்குமா சென்னை?

ஐ.பி.எல். தொடரில் இதுவரை 8 முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ள மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அதில் 3 முறை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. அந்த அணி கடந்த சீசனில் (2020) லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தாலும் நடப்பு சீசனில் அசுர பலத்துடன் திரும்பி வந்து பிளே-ஆப் சுற்றுக்கு முதலாவது அணியாக தகுதி பெற்றது. எனினும், கடைசியாக நடத்த லீக் சுற்றில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து பட்டியலில் 2வது இடத்தை தக்க வைத்துக்கொண்டது.

சென்னை அணியில் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் (533 ரன்கள்) மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் (546) ஜோடியின் நேர்த்தியான ஆட்டத்தால் அந்த அணிக்கு வலுவான தொடக்கம் கிடைத்து வருகிறது. இந்த ஜோடி எதிர்வரும் போட்டிகளிலும் அதிரடி காட்டினால் டெல்லி அணியை எளிதில் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இதே போல் மிடில் – ஆடரில் களம் காணும் அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா நல்ல பங்களிப்பை கொடுத்தால் அணி பேட்டிங்கில் அசுர பலம் பெறும். பந்து வீச்சில் ஷர்துல் தாக்கூர் (14 ஆட்டங்களில் 18 விக்கெட்டுகள்), டுவைன் பிராவோ (12 விக்கெட்கள்), தீபக் சாஹர் ஆகியோர் வலு சேர்க்கிறார்கள்.

டெல்லி அணிக்கெதிரான கடைசி 4 ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்து துவண்டுள்ள சென்னை அணி அதற்கு பதிலடி கொடுத்து முற்றுப் புள்ளி வைக்குமா? என்பது நாளை ஆட்டத்தின் முடிவை பொருத்தே அமையும்.

கோப்பைக்கு குறிவைக்கும் இளம் வீரரின் படை?

இளம் வீரர் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் நடப்பு சீசனில் 2வது அணியாக பிளே-ஆப்புக்கு தகுதி பெற்று இருந்தாலும் லீக் சுற்று முடிவில் அந்த அணி 20 புள்ளிகளை பெற்று பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா (401 ரன்கள்) மற்றும் ஷிகர் தவான் (544 ரன்கள்) இந்திய மண்ணில் நடந்த ஆட்டங்களில் வலுவான பட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஜோடிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது.

அதிரடி ஆட்டக்காரர்கள் இல்லாமல் தவித்து வரும் டெல்லி அணியின் நிலமையை கேப்டன் பண்ட் (362 ரன்கள்), ஷிம்ரான் ஹெட்மியர் ஓரளவு சரிக்கட்டி வருகின்றனர். ரிபால் படேல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அவ்வப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கவனம் பெறுகின்றனர்.

டெல்லி அணியின் மிகப்பெரிய பலம் அந்த அணியின் பந்து வீச்சு எனலாம். அந்த அணியின் அவேஷ் கான் (22 விக்கெட்), அக்சர் பட்டேல் (15 விக்கெட்), ககிசோ ரபாடா (13 விக்கெட்) மற்றும் அன்ரிச் நார்ட்ஜே (6 ஆட்டங்களில் 9 விக்கெட்டுகள் / 5.59 எக்கனாமி ரேட்) ஆகிய வீரர்கள் மிரட்டலான பந்து வீச்சை வெளிப்படுத்தியுள்ளனர்.

இவர்களில் ககிசோ ரபாடா மற்றும் அன்ரிச் நார்ட்ஜேவை சென்னை அணியின் தொடக்க வீரர் ருத்ராஜ் கெய்க்வாட்க்கு எதிராக பண்ட் பயன்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். ஏனென்றால், கெய்க்வாட்க்கு ஷார்ட் பந்துகள் மிகப்பெரிய வீக் பாய்ண்டாக உள்ளது.

ஆக மொத்தத்தில் சமபலத்துடன் உள்ள இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

பெங்களூரு-கொல்கத்தா அணிகள் மோதல்

வரும் 11-ந்தேதி திங்கள்கிழமை சார்ஜாவில் நடக்கும் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) சுற்றில் புள்ளி பட்டியலில் 3-வது மற்றும் 4-வது இடங்களை பெற்றுள்ள பெங்களூரு-கொல்கத்தா அணிகள் சந்திக்கின்றன. இதில் தோல்வியை தழுவும் அணி வெளியேறும். வெற்றி பெறும் அணி, இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் (குவாலிஃபைர் – 1) தோல்வி அடையும் அணியுடன் இரண்டாவது தகுதி சுற்றில் (குவாலிஃபைர் – 1) மோதும். இந்த போட்டி வரும் 13-ந்தேதி புதன்கிழமை நடக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Dc vs csk tamil news ipl quaifier 1 lineup csk faces dc