Delhi Capitals vs Kolkata Knight Riders IPL 2024 Score: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: DC vs KKR Live Score, IPL 2024
ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சிடமும், 2-வது ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்சிடமும் தோல்வி கண்டது. அடுத்து, 20 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.
மறுபுறம், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 4 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்சையும், அடுத்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சையும் பதம்பார்த்து வலுவான நிலையில் உள்ளது.
டெல்லி அணி விசாகப்பட்டினத்தில் பெற்ற வெற்றி உத்வேகத்தை தொடரவே நினைக்கும். அதேவேளையில், 'ஹாட்ரிக்' வெற்றியை சுவைப்பதற்காக கொல்கத்தா அணியும் தீவிர முனைப்பு காட்டும். எனவே, இவ்விரு அணிகள் மோதும் இன்றயை ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
ஐ.பி.எல் தொடரில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் இதுவரை 32 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் டெல்லி 15ல் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், கொல்கத்தா 16ல் வெற்றி பெற்றுள்ளது.
டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட், சுனில் நரைன் களம் இறங்கினர். தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக அடித்து விளையாடினார்கள். இருவரும் சேர்ந்து பங்காளி ஆட்டத்துக்கு 50 ரன்களைக் கடந்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்திருந்தபோது, 12 பந்துகளில் 18 ரன்கள் அடித்திருந்த பில் சால்ட், அன்ரிச் நார்ட்ஜே பந்தில் ஸ்டப்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, அங்கிரிஷ் ரகுவன்ஷி பேட்டிங் செய்ய வந்தார்.
சுனில் நரைன் மற்றும் அங்கிரிஷ் ரகுவன்ஷி ஜோடி அதிரடியாக அடித்து விளையாடியது. பந்துகளை பவுண்டரிக்கும் சிக்சருக்கும் விரட்டிய சுனில் நரைன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி பங்காளி ஆட்டத்தில் 100 ரன்களைக் கடந்தனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 12.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்திருந்தபோது, 39 பந்துகளில் 85 ரன்கள் அடித்திருந்த சுனில் நரைன், மிட்செல் மார்ஷ் பந்தில் பண்ட் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஆண்ட்ரே ரஸ்ஸல் பேட்டிங் செய்ய வந்தார்.
ஆண்ட்ரே ரஸ்ஸலும் தன் பங்குக்கு அதிரடியாக விளையாடி பந்துகளை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விரட்டினார். இதனிடையே, ரகுவன்ஷி அரைசதம் அடித்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 13.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தபோது, 27 பந்துகளில் 54 ரன்கள் அடித்திருந்த ரகுவன்ஷி, அன்ரிச் நார்ட்ஜே பந்தில் இஷாந்த் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய வந்தார்.
இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் செய்தது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னர் மற்றும் பிரித்வி ஷா களமிறங்கினர். அடித்து ஆடிய இருவரும் நீண்ட நேரம் தாக்குபிடிக்க முடியவில்லை. டெல்லி அணி 1.5 ஓவர்களில் 21 ரன்கள் எடுத்திருந்தபோது, 7 பந்தில் 10 ரன்கள் அடித்திருந்த பிரித்வி ஷா, வைபவ் அரோரா பந்தில், வருண் சக்ரவர்த்தியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, மிட்செல் மார்ஷ் பேட்டிங் செய்ய வந்தார்.
மிட்செல் மார்ஷ், ஸ்டார்க் பந்தில் ராமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து வந்த அபிஷேக் பொரெல், வைபவ் அரோரா பந்தில் சுனில் நரைனிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆகி வெளியேறினார். மிட்செல் மார்ஷ், அபிஷேக் பொரெல் இருவரும் டக் அவுட் ஆனது டெல்லி அணிக்கு அதிர்ச்சி அளித்தது.
அடுத்து வந்த கேப்டன் ரிஷ்ப் பண்ட் ஆரம்பம் முதலே அதிரடியாக அடித்து ஆடினார்.
டெல்லி கேபிடல்ஸ் அணி 4.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் எடுத்திருந்தபோது, மறுமுனையில் இருந்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 13 பந்துகளில் 13 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஸ்டார்க் பந்தில் போல்ட் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த டிரைஸ்டன் ஸ்டப்ஸ், ரிஷப் பண்ட் உடன் ஜோடி சேர்த்து அதிரடியாக விளையாடினார்.
சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் சிக்ஸர், பவுண்டரி என பறக்கவிட்டு அரைசதம் அடித்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணி 12.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்திருந்தபோது, 25 பந்துகளில் 55 ரன்கள் அடித்திருந்த ரிஷப் பண்ட், வருண் சக்ரவர்த்தி பந்தில், ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த அக்சர் படேல் முதல் பந்திலேயே வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து சுமித் குமார் பேட்டிங் செய்ய வந்தார்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடிய, ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 54 ரன்கள் அடித்திருந்த நிலையில், வருண் சக்ரவர்த்தி பந்தில் ஸ்டார்க் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதற்கு பிறகு, டெல்லி அணியின் நம்பிக்கை தகர்ந்தது. சுமித் குமார் 7 ரன், ரசிக் சலம் 1 ரன், நார்ட்ஜே 4 ரன் அவுட் ஆனார்கள்.
கொல்கத்தா அணி தரப்பில், வைபவ் அரோரா, வருண் சகரவர்த்தி தலா 3 விக்கெட்டுகளும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும் ரஸ்ஸல், நரைன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனால், டெல்லி கேபிடல்ஸ் அணி 17.2 ஓவர்களில் 166 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.