IPL 2024 | Delhi Capitals | Lucknow Super Giants: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான லீக் சுற்றில் இன்னும் 7 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அடுத்த சுற்றான பிளே-ஆஃப்க்கு ஒரே ஒரு அணி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) மட்டுமே அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: DC vs LSG LIVE Score, IPL 2024
ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட 6 அணிகள் பிளே-ஆஃப் சுற்றில் மீதமுள்ள 3 இடங்களுக்கு போட்டியிடுகின்றன. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிளே-ஆஃப் சுற்றில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளன.
டெல்லி - லக்னோ மோதல்
இந்த நிலையில், ஐ.பி.எல். 2024 தொடரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7:30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கும் 64-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது.
டாஸ் வென்ற லக்னோ பவுலிங்; டெல்லி முதலில் பேட்டிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய அதிரடி வீரர் மெக்ருக் ரன் கணக்கை தொடங்காமலே பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய ஷே ஹேப் மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் பொரேலுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினார்.
இவர்களின் அதிரடியால் டெல்லி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்த நிலையில், சிக்சர் பவுண்டரிகளாக விளாசிய அபிஷேக் பொரேல், 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 33 பந்துகளில் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 58 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சேர்த்து அசத்தியது. அடுத்து கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார்.
இதனிடையே அதிரடியாக விளையாடிய ஹோப், 27 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 38 ரன்கள் குவித்து வெளியேறிய நிலையில், நிதானமான விளையாடிய ரிஷப் பண்ட், 23 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 57 ரன்களும், அக்சர் பட்டேல் 10 பந்துகளில் 14 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. லக்னோ அணி தரப்பில் நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளும், அர்ஷித் கான், ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணியின் இன்னிங்சை தொடங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் – குயிண்டன் டீகாக் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 3 பந்துகளை சந்தித்த ராகுல் 5 ரன்களுக்கும், டீகாக் 12 ரன்களுக்கும் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த ஸ்டோயினிஸ் 5, திபக் ஹூடா 0 என அடுத்தடுத்து வீழ்ந்தனர்.
தொடர்ந்து களமிறங்கிய பதோனி, 6 ரன்களுக்கும், சிறிது நேரம் தாக்குபிடித்த குணால் பாண்டியா 18 ரன்களுக்கும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரன், அரைசதம் கடந்து அசத்திய நிலையில், 27 பந்துகளில் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 61 ரன்கள் குவித்து வெளியேறினார். இதனால் லக்னோ அணி 134 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
8-வது விக்கெட்டுக்கு இணைந்த அர்ஷத் – யுத்வீர் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தது. இவர்கள் இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 33 ரன்கள் சேர்த்த நிலையில், யுத்வீர் 8 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 14 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அது சமயம் அதிரடியாக விளையாடிய அர்ஷித் கான் 25 பந்துகளில் அரைதசதம் கடந்து அசத்தினார்.
கடைசி ஓவரில் லக்னோ அணியின் வெற்றிக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. ரஷிக் தார் வீசிய இந்த ஓவரில் லக்னோ அணி 3 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னோ அணி 9 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது. அரைசதம் கடந்த அர்ஷித் கான் 33 பந்துகளில் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
டெல்லி அணி தரப்பில், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளும், கலீல், அக்சர், முகேஷ், குல்தீப், ஸ்டப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னெறியுள்ள நிலையில், தோல்வியடைந்த லக்னோ 12 புள்ளிகளுடன், 7-வது இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.