IPL 2024 | Mumbai Indians | Delhi Capitals: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் 3:30 மணிக்கு டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் தொடங்கும் 43-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதியது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: DC vs MI Live Score, IPL 2024
டாஸ் வென்ற மும்பை பவுலிங்; டெல்லி முதலில் பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீடுவதாக அறிவித்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் - அபிஷேக் போரல் ஜோடி களமிறங்கிய நிலையில், தொடக்கம் முதலே அதிரடியாக ஆடி வந்த ஜேக் ஃப்ரேசர் 15 பந்துகளில் அரைசதம் அடித்து மிரட்டினார். தொடர்ந்து சிறப்பாக மட்டையைச் சுழற்றிய அவர் 27 பந்துகளில் 11 பவுண்டரிகள் 6 சிக்ஸர்களுடன் 84 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
அவருடன் மறுமுனையில் இருந்த அபிஷேக் போரல் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரியை விரட்டி 36 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்ட ஷாய் ஹோப் 41 ரன்களுக்கும், 2 பவுண்டரி, 2 சிக்ஸர் விளாசிய கேப்டன் ரிஷப் பண்ட் 29 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 48 ரன்களுடனும், அக்சர் படேல் 11 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருக்க, டெல்லி அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டை இழந்த டெல்லி அணி 257 ரன்களை குவித்தது. இதனால், மும்பை அணிக்கு 258 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லூக் வூட், ஜஸ்பிரித் பும்ரா, முகமது நபி, பியூஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரோகித் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரம் தாக்குபிடித்த இஷான் கிஷன் 14 பந்துகளில் 20 ரன்களும், 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் 13 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்தும் வெளியேறினர்.
65 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணிக்கு 4-வது விக்கெட்டுக்கு இணைந்த திலக் வர்மா ஹர்திக் பாண்டியா ஜோடி அதிரடியாக விளையாடியது. கேப்டனுக்கு உரிய பாணியில் அணியை வெற்றியை நோக்கி பயணிக்க வைத்த ஹர்திக் பாண்டிய அரைசதத்தை நெருங்கிய நிலையில், 24 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் 25 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய திலக் வர்மா, சிறப்பாக விளையாடிய நிலையில், அடுத்து களமிறங்கிய வாதரோ 4 ரன்களுக்கு வெளியேறினார். அதிரடியாக விளையாடிய டிம் டேவிட் 17 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 37 ரன்கள் குவித்து இறுதிக்கட்டத்தில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முகேஷ் குமார் வீசிய முதல் பந்தில் திலக் வர்மா ரன் அவுட் ஆனார்.
32 பந்துகளை சந்தித்த அவர், 4 பவுண்டரி 4 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த நபி 7 ரன்களிலும், சாவ்லா 10 ரன்களிலும் வெளியேறினர். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் ரஷிக், முகேஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கலீல் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“