10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று புதன்கிழமை இரவு 7:30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் 32வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: DC vs RR LIVE Cricket Score, IPL 2025
டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு - டெல்லி பேட்டிங்
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவுலிங் போடுவதாக அறிவித்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் - அபிஷேக் போரல் ஜோடி களமிறங்கினர். அணிக்கு அதிரடி தொடக்கம் கொடுக்க நினைத்த இந்த ஜோடியில், ஜேக் ஃப்ரேசர் 9 ரன்னில் அவுட் ஆனார்.
அவருக்குப் பின் வந்த கருண் நாயர் ரன் எதுவும் எடுக்காத நிலையில், ரன் அவுட் ஆகி வெளியேறினார். தொடர்ந்து களம் புகுந்த கே.எல். ராகுல் தொடக்க வீரர் அபிஷேக் போரலுடன் இணைந்து ஆடினார். இந்த ஜோடி நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தியது. இதில் ராகுல் 38 ரன்னுக்கு அவுட் ஆகினார். அவருடன் ஜோடியில் இருந்த அபிஷேக் போரல் அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 49 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.
அடுத்து இணைந்த கேப்டன் அக்சர் படேல் - டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஜோடியில் இருவரும் மாறி மாறி தலா 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினர். இவருமே தலா 34 ரன்கள் எடுத்தபோது அவுட் ஆகினர். களத்தில் இருந்த அசுதோஷ் சர்மா 15 ரன்கள் எடுக்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. இதனால், ராஜஸ்தான் அணிக்கு 189 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. ராஜஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஆர்ச்சர் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதன் மூலம் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் - கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.
சஞ்சு சாம்சன் 31 ரன்கள் எடுத்த நிலையில், காயம் காரணமாக வெளியேறினார். அடுத்து வந்த ரியான் பராக் 8 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஷ் ராணா பேட்டிங்கில் ருத்ர தாண்டவமாடினார்.
இதனிடையே, அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப் யாதவ் பந்தில் ஸ்டார்க் இடம் கேட்ச் கொடுத்த அவுட் ஆனார். மறுமுனையில் நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ராஜஸ்தான் அணி இலக்கை நெறுங்கிக்கொண்டிருந்தபோது, இறுதி ஓவரில் 6 பந்துகளில் 9 ரன்கள் தேவை என்ற நிலையில், துருவ் ஜுரேல் - ஹெட்மேயர் களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் அணிக்கு கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்டபோது, மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை எதிர்கொண்ட துருவ் ஜுரேல், 2 ரன்களுக்காக ஓடியபோது ரன் அவுட் செய்யப்பட்டார். இதன்மூலம், 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதனால், வெற்றியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் அளிக்கப்பட்டது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் ஹெட்மேயர் - ரியான் பராக் களமிறங்கினர். அபாரமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ராஜஸ்தான் அணி 11 ரன்கள் மட்டுமே எடுத்தது. 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் ஸ்டப்ஸ் - கே.எல்.ராகுல் 12 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி டெல்லி அணி திரில் வெற்றி பெற்றது.
இரு அணிகளின் ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்:
டெல்லி கேபிடல்ஸ்: ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், கருண் நாயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், மோஹித் சர்மா
ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், நிதிஷ் ராணா, வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.
நேருக்கு நேர்
ஐ.பி.எல்-லில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் 29 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இந்த 29 போட்டிகளில் டெல்லி அணி 14 போட்டிகளில் வென்றுள்ளது, அதே நேரத்தில் ராஜஸ்தான் 15 முறை வெற்றி பெற்றுள்ளது.