வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் அனைத்து அணிகளுக்கும் மிகப்பெரிய சவால் என்றால் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிலவும் வெப்பமான மற்றும் ஈரப்பதமான சூழ்நிலைகள் தான் என்கிறார் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் ஏபி டிவில்லியர்ஸ். தங்கள் அணி எப்படி ஐபிஎல் 13வது சீசனுக்கு ரெடியாகிறது என்பது குறித்து பேசும்போது இந்தக் கருத்தை கூறியிருக்கிறார் ஏபிடி. இவர் கலந்துரையாடும் வீடியோவை, பெங்களூரு அணி தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் பல்வேறு நிகழ்வுகள் குறித்து பேசியுள்ளார் ஏபிடி. துபாயில் நிலவும் காலநிலை குறித்து, “உண்மையாக இதற்கு முன் இதுபோன்ற வெப்பநிலையில் விளையாடி எனக்கு பழக்கமில்லை. இங்கு நிலவும் வெப்பநிலை எனக்கு சென்னையை நியாபகப்படுத்துகிறது.
ஒருமுறை ஜூலையில் இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் போட்டி சென்னையில் நடந்தது. அந்தப் போட்டியில் சேவாக், 300 ரன்கள் அடித்தார். இதுதான் என் வாழ்க்கையில் அதிக வெப்பநிலையில் நான் விளையாடிய போட்டி. இதை தாண்டி இப்போது துபாய் வெப்பநிலை. நான் துபாய் வந்ததும், சில மாதங்களின் வானிலை நிலவரங்களைச் சோதித்தேன். அதை ஒப்பிடும் போது இப்போது இருக்கும் சூடு பரவாயில்லை. இன்னும் சில மாதங்களுக்கு இந்த வெப்பமான நிலை நம் விளையாட்டின் ஒரு பகுதியாகத் தான் இருக்கப்போகிறது. எனவே, ஒவ்வொரு இன்னிங்ஸின் கடைசி 5 ஓவர்களுக்கான ஆற்றல் வீரர்களிடம் உள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
பெரும்பாலான ஆட்டங்கள் இரவு நேரத்தில் நடக்கிறது என்றாலும், நிலைமைகள் இன்னும் சவாலானதாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. துபாயின் வெப்ப நிலையை சமாளிப்பது மிகப்பெரிய சவாலாக இருக்கும்” என்றவர், ரசிகர்கள் இல்லாமல் வெற்று கிரவுண்டில் விளையாட உள்ளதை பற்றி பேசியுள்ளார். அதில், “
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மூடிய கதவுகளுக்குப் பின்னால் காலியாக இருக்கும் மைதானத்தில் விளையாட உள்ளதை நினைக்கும் போது நிச்சயம் இந்தியாவை மிஸ் செய்கிறேன். இந்தியாவில் மைதானங்களில் நிரம்பி வழியும் ரசிகர்கள் முன்னிலையில் வீரர்கள் அனைவரும் விளையாடி பழக்கமாகிவிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக பெங்களூரு மைதானத்தில் ரசிகர்களின் வானைப் பிளக்கும் சத்தங்களை கேட்கும்போது ஆர்சிபியின் ஆட்டம் வேறு மாதிரி இருக்கும். ஆனால் இந்த முறை அதை அனைவரும் மிஸ்செய்வோம். ஆனால் இதுபோன்ற காலியான மைதானங்களில் நான் விளையாடியதில்லை எனக் கூற மாட்டேன். இதுபோன்ற வெற்று அரங்கங்களில் நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளேன். நான் அப்படி தான் வளர்ந்தேன்” எனக் கூறியிருக்கிறார்.