Deepak Chahar - T20 World Cup Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்த தொடருக்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. முன்னதாக, இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகளுடன் இருதரப்பு தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரை இந்தியா 2-1 என்ற கண்ணக்கிலும், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரை 2-1 என்ற கண்ணக்கிலும் இந்திய அணி வென்றுள்ளது.
இந்நிலையில், இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லக்னோவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில், 250 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் போரடித் தோற்றது.
தீபக் சாஹருக்கு காயம்
இந்நிலையில், இந்தப் போட்டிக்கான பயிற்சியின் போது ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் எஞ்சிய இரண்டு ஆட்டங்களில் விளையாடாத நிலை ஏற்பட்டுள்ளது. தவான் தலைமையிலான ஒருநாள் அணியில் அவர் இடம் பிடிக்காமல் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
"தீபக் கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அது மிகவும் தீவிரமான காயமில்லை. இருப்பினும் சில நாட்கள் ஓய்வெடுப்பது நல்லது.
டி20 உலகக் கோப்பை காத்திருப்பு (ஸ்டாண்ட்-பை) பட்டியலில் இருக்கும் அவரை மற்ற இரண்டு ஆட்டங்களிலும் விளையாட வைக்கும் முடிவை அணி நிர்வாகம் தான் எடுக்கும். எப்படியிருந்தாலும், அங்கு அவர் தேவை இருந்தால், அதுவே முன்னுரிமையாக இருக்கும்." என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை கனவு அவ்ளோதானா?
இந்திய கிரிக்கெட் அணியில் திறமைகளுக்கு பஞ்சமில்லை என்றாலும், முன்னணி வீரர்களுக்கு காயம் ஏற்படுவது, ஒழுங்கே கட்டமைக்கப்பட்ட அணிக்கு பின்னடைவை கொடுத்து விடுகிறது. குறிப்பாக, டி20 உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களுக்காக தயார் நிலையில் உள்ள அணியில் இடம் பிடித்த வீரர்களுக்கு இப்படி அடிக்கடி காயம் ஏற்படுவது பெரும் குழப்பத்தை கொண்டு வருகிறது. ஏற்கனவே, காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விலகியுள்ள அவருக்கு பதிலாக ஆடும் லெவனில் யார் இடம் பிடிப்பார் என்ற கேள்வி எழுந்து வருகிறது.
ஆனால், அவருக்கு பதிலாக முகமது ஷமி ஆடும் லெவனில் சேர்க்கப்பட அதிக வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டு வருகிறது. எனினும், சமீபத்திய தொடர்களில் சிறப்பாக பந்துவீசி வரும் தீபக் சாஹருக்கு அந்த இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், சாஹருக்கு காயம் ஏற்பட்டு இருப்பது அவருக்கான டி20 உலகக் கோப்பை ஆடும் லெவன் வாய்ப்பை குறைத்துள்ளது. மேலும், அவர் ஆஸ்திரேலியா பறந்து செல்லும் வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. இதனால் அவரின் டி20 உலகக் கோப்பை கனவு கானல் நீர் ஆகி விடுமோ? என்ற அச்சத்தில் ரசிகர்கள் உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.