இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீரர்கள் ரவிக்குமார் மற்றும் தீபக் குமார் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அதன்பின்னர் நடைபெற்ற இறுதிச்சுற்றில் இரண்டாவது இடம் பிடித்த தீபக்குமார் வெள்ளிப்பதக்கம் வென்றார். இவர் இறுதிச்சுற்றில் 247.7 புள்ளிகள் பெற்றார்.
இப்பிரிவில் சீன வீரர் யங் ஹோரன் 249.1 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். தைவான் வீரர் லு ஷாவோசுவான் வெண்கலப்பதக்கம் வென்றார். ரவிக்குமார் 4-வது இடத்தைப் பிடித்தார்.
மேலும், பேட்மிண்டன் மகளிர் அணிகளுக்கான காலிறுதி ஆட்டத்தில் இன்று இந்தியா-ஜப்பான் அணிகள் மோதின. முதலில் நடைபெற்ற ஒற்றையர் ஆட்டத்தில், இந்தியாவின் பி.வி. சிந்து ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் பி.வி. சிந்து 21-18, 21-19 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றது.
அதன்பின்னர் நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் சிக்கி ரெட்டி- ஆரத்தி சாரா ஜோடி ஜப்பான் ஜோடியிடம் 15-21, 6-21 என்ற நேர்செட்களில் தோல்வி அடைந்தது. நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவாலும் ஏமாற்றம் அளித்தார். கடுமையாக போராடிய அவர் நசோமி ஒகுஹராவிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் ஜப்பான் 2-1 என முன்னனிலை பெற்றது.
கடைசியாக நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் அஷ்வினி பொன்னப்பா-பி.வி.சிந்து ஜோடி, மத்சுடோமோ- ரகாஷாஷி ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் இந்திய ஜோடி 13-21, 12-21 என்ற நேர்செட்களில் தோல்வி அடைந்தது. இதனால் 3-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்து பேட்மிண்டன் மகளிர் அணிகளில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றுள்ளார். பதக்கப்பட்டியலில் இந்தியாவுக்கு கிடைத்திருக்கும் இரண்டாவது தங்கம் இதுவேயாகும்.
மேலும் தகவலுக்கு இணைந்திருங்கள்...