delhi capitals vs Rajasthan Royals ipl 2020 : 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்சுடன் மோதியது. இதில் ‘டாஸ்’ வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவன் களமிறங்கினர். பிரித்வி ஷா ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அவரைத் தொடர்ந்து ரஹானே களமிறங்கினார். அவரும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் களமிறங்கினார். தவன், ஸ்ரேயாஸ் அய்யர் இணையை ரன்களைக் குவிக்கத் தொடங்கினர். அதிரடியாக ஆடிய தவன் 33 பந்துகளில் 57 ரன்களைக் குவித்து ஸ்ரேயாஸ் கோபால் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஸ்ரேயாஸ் அய்யர் அரைசதத்தையும் கடந்தார்.
இதன் பின்னர் ஷிகர் தவானும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யரும் ஜோடி சேர்ந்து அணியை சிக்கலில் இருந்து விடுவித்து தூக்கி நிறுத்தினர். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுக்கு 161 ரன்கள் சேர்த்தது. கடைசி 5 ஓவர்களில் திணறிப்போன டெல்லி அணி 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டும், உனட்கட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து 162 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணி விளையாடியது. தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 9 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 22 ரன் விளாசினார். பென் ஸ்டோக்சும், சஞ்சு சாம்சனும் ரன் சேர்த்தனர். இதையடுத்து கடைசி ஓவரில் 22 ரன்கள் தேவையாக இருந்தது. ஒரு விக்கெட்டை பறிகொடுத்த ராஜஸ்தான் அணி 8 ரன் மட்டுமே எடுத்தது. 20 ஓவர்களில் அந்த அணி 8 விக்கெட்டுக்கு 148 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி அணி 6-வது வெற்றியை ருசித்ததுடன் புள்ளி பட்டியலிலும் முதலிடத்துக்கு முன்னேறியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil