இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே ஐபிஎல் தொடரில் நீடிக்க முடியும் என்பதால், டெல்லி – ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளும் இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற உள்ள இன்றைய ஐபிஎல்-யின் லீக் போட்டியில் டெல்லி டேர் டெவில்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. தொடர் தோல்வி காரணமாக கேப்டன் பதவியில் இருந்து கவுதம் காம்பீர் விலகிய நிலையில் டெல்லிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அதிரடியாக எழுச்சி பெற்றது.
ஆனால், சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பந்த், விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக ஆடியும், 13 ரன்களில் டெல்லி அணி தோல்வியைத் தழுவியது. இதுவரை 8 ஆட்டங்களில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள டெல்லி அணி, இன்றைய ஆட்டம் உட்பட மீதமுள்ள ஆட்டங்களில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நெருக்கடி நிலையில் உள்ளது.
அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி ரஹானே, சாம்சன் ஆகியோரது ஆட்டத்தை நம்பியே உள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆட்டம் குறிப்பிடும்படியாக இல்லை. பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்சர் சிறப்பாக வீசி வருகிறார். சுழற்பந்து வீச்சாளர்கள் ஷ்ரேயஸ் கோபால், கௌதம் ஆகியோர் பந்துவீச்சு எடுபடாத நிலையே உள்ளது.
இந்த சீசனில், இதுவரை 7 ஆட்டங்கள் விளையாடி, 3 வெற்றி, 4 தோல்வியுடன் உள்ள ராஜஸ்தான் தொடர்ந்து, புள்ளிபட்டியலில் 6-ம் இடத்தில் உள்ளது. டெல்லிக்கு எதிரான இன்றைய போட்டியில், வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி தனது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்கும்.
ஆக மொத்தம், இன்றைய ஐபிஎல் போட்டி, டெல்லி – ராஜஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் வாழ்வா? சாவா? ஆட்டமாக உள்ளதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
ஆட்டத்தின் லைவ் ஸ்கோர் தெரிந்து கொள்ள ஐஇதமிழுடன் இணைந்திருங்கள்...