Devon Conway - MS Dhoni - IPL 2023 Tamil News: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டியில் சென்னை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி 5-வது முறையாக ஐ.பி.எல் கோப்பையை முத்தமிட்டது.
இந்நிலையில், இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக களமாடியவர் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே. இவர் நடப்பு சீசனில் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக, குஜராத் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதோடு, சீசன் முழுதுமே அணிக்கு தேவையான வலுவான தொடக்கத்தை கொடுக்க இவர் தவறியதே இல்லை.
இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடிய கான்வே 672 ரன்களை எடுத்தார். இதன் மூலம் சென்னை அணிக்கு சீசனின் அதிகபட்ச ஸ்கோரராக இருந்தார். குஜராத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் இவர் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். இப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதையும் பெற்ற அவர் வெற்றி குறித்து பேசுகையில், "இது எனது வாழ்க்கையின் சிறந்த டி20 வெற்றி என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக எனது வாழ்க்கையில் சிறந்த டி20 வெற்றி அல்லது சாதனை இதுதான்” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், 31 வயதான டெவோன் கான்வே சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி மற்றும் சி.எஸ்.கே அணி குறித்தும் நியூசிலாந்தின் விளையாட்டு ஊடகமான SENZ -யிடம் விவரித்துள்ளார். அவர் கூறியது பின்வருமாறு:-
"அவர் (தோனி) இந்தியாவில் மிகவும் விரும்பப்படுகிறார், அவர் அங்கு மிகவும் வழிபடப்படுகிறார். அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையைப் பார்ப்பது மற்றும் அவர் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பு நம்பமுடியாதது. நாங்கள் விளையாடிய ஒவ்வொரு ஆட்டமும் சொந்த மைதானத்தில் விளையாடியது போன்று இருந்தது. ஏனென்றால், ரசிகர்கள் எம்.எஸ் தோனிக்காக பல்வேறு இடங்களில் இருந்து பயணித்து வந்தனர்.
இது மிகச் சிறப்பு என்பேன். நான் பழகியதை விட வித்தியாசமான உலகம். அவரது புகழ் காரணமாக ஹோட்டலுக்கு வெளியே அவரால் அதிகமாக சென்று வர முடியாது என்று நினைக்கிறேன். வீரர்களின் மரியாதையையும் பெற்றவராக இருக்கிறார்.
அவர் அங்கு திட்டங்களை நடத்தும் விதம், அவர் ஒரு நல்ல கலாச்சாரத்தை இயக்குகிறார், அவருக்கும் அணியின் உரிமையாளர்களுக்கும் இடையே நல்ல உறவு இருக்கிறது. அவரது ஆதரவைப் பெறுவது ஒரு குழுவாகவும் தனிநபர்களாகவும் எங்களுக்கு மிகவும் முக்கியமானது மற்றும் நன்மை பயக்கும்.
என்னை தொடக்க வீரராக களமிறக்க அனுமதித்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் ஒப்புக்கொண்டார். சீசன் முழுவதும் தொடக்க வீரராக பேட்டிங் ஆடும் வாய்ப்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். மேலும் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் கேப்டன் எம்எஸ் தோனியின் ஆதரவைப் பெற்றேன்.
ஐ.பி.எல்.-லில் எனது ஆட்டத்தை வளர்த்துக் கொள்ளவும், என்னை வெளிப்படுத்தவும் இது எனக்கு கிடைத்த பெருமையான வாய்ப்பு. ஒவ்வொரு டி20 ஆட்டத்திற்கும் வெவ்வேறு திட்டங்கள், வெவ்வேறு சூழ்நிலைகள் மற்றும் ஆட்டத்தின் வெவ்வேறு தருணங்களில் எவ்வாறு அடித்து ஆடுவது என்பது பற்றி அனுபவம் வாய்ந்த சக வீரர்களிடம் இருந்து கற்கிறோம்.
சென்னையில் விளையாடுவது சுழல் ஆடுகளமாக இருந்தது. எனவே நீங்கள் லக்னோவைப் போலவே 2 ஸ்பின்னர்களையும் எடுத்துச் செல்வீர்கள். ஆனால், நீங்கள் பெங்களூரு அல்லது மும்பை மைதானங்களில் விளையாடினால், அது சற்று பேட்டிங்கிற்கு உகந்ததாக இருக்கும்." இவ்வாறு டெவோன் கான்வே தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.