தோனிக்கு பிறகு இந்திய அணியில் நம்பிக்கைக்குரிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்?

தோனி இன்றும் அதே ஃபார்மில் இருந்தாலும், தினேஷின் அபாரமான ஆட்டத்திறனால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது

ஆசைத் தம்பி

2000ம் ஆண்டுக்கு பிறகு விக்கெட் கீப்பிங்கில் சரியான வீரர் கிடைக்காமல் தடுமாறியது இந்திய கிரிக்கெட் அணி. அப்போது, இடது கை பேட்ஸ்மேனான பார்த்திவ் பட்டேல் 2002-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்காம் டெஸ்டில் அறிமுகம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு 17 வயதுதான். ஆனால் அணி நிர்வாகம் எதிர்பார்த்த விக்கெட் கீப்பிங் + பேட்டிங் திறமையை அவரால் வெளிப்படுத்த முடியவில்லை. இதனால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

அதன்பின் தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் 2004ம் ஆண்டு மும்பையின் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் களம் இறக்கப்பட்டார். இவரிடம் பார்த்திவ் படேலை விட வேகமான, துடிப்பான விக்கெட் கீப்பிங்கை காண முடிந்தது. ஆனால், பேட்டிங்கில் இவராலும் பெரியளவில் சாதிக்க முடியவில்லை. அப்போது தினேஷ் கார்த்திக்கிற்கு 19 வயதுதான்.

இந்தநிலையில் தான் ராஞ்சியில் இருந்து ‘சடையன்’ எனும் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்கு தேர்வானார். இவரும் ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், 2005ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 148 ரன்களை விளாசி, அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான அந்த தொடர் 6 போட்டிகளை கொண்டது. முதல் போட்டியில் சேவாக் சதம் + சச்சினின் 5 விக்கெட்டுகள் துணையுடன் வென்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் தோனியின் அபார இன்னிங்ஸ் மூலம் வென்றது. அதன்பிறகு வரிசையாக 4 போட்டிகளிலும் இந்தியா தோற்று தொடரை இழந்தது. இருப்பினும், அந்தத் தொடரில் தோனி எனும் மெகா கண்டுபிடிப்பு நிகழ்ந்ததால், அந்த தொடர் உண்மையில் இந்தியாவுக்கு வரப்பிரசாதம் தான்.

இதன்பிறகு, தோனியை இந்திய அணியில் இருந்து அசைக்க முடியவில்லை. இருப்பினும், பேட்டிங்கில் அதிரடி இருந்தாலும் இன்கன்சிஸ்டண்ட்-ஆக இருந்த தோனி, 2007ல் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட பின், தனது ஆட்ட பாணியை சற்று மாற்றி, Slow and steady wins the race எனும் பழமொழியை தனக்கேற்ற வகையில் புதுமொழியாக தகவமைத்துக் கொண்டார்.

அதன்பிறகு, கீப்பிங் + பேட்டிங் எனும் இரட்டை சவாரியில் தனிக்காட்டு ராஜாவாக பயணம் செய்தார் தோனி. நீண்டகால பயணத்திற்கு பிறகு, கடந்த 2014ம் ஆண்டு இறுதியில் திடுதெப்பென்று, ஆஸ்திரேலியாவில் நடந்த அந்நாட்டிற்கு எதிரான டெஸ்ட் தொடரில், பாதியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால், அவருக்கு பிறகு ரிதிமான் சஹா விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டார். அவரால், தோனியின் இடத்தில் கால்வாசியைக் கூட நிரப்ப முடியவில்லை. அவ்வப்போது பார்த்திவ் படேல் டெஸ்ட் போட்டிகளுக்கு விக்கெட் கீப்பராக நியமிக்கப்பட்டாலும், அவரால் ஏதும் செய்ய முடியவில்லை.

தோனிக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் நம்பிக்கைக்குரிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார்? இதற்கு இன்று வரை பிசிசிஐ பதில் கண்டறியவில்லை. டெஸ்டில் இருந்து தோனி ஓய்வு பெற்று 4 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்னமும் டெஸ்ட் தொடர்களின் போது தரம் வாய்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது இந்திய அணி.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தோனி இன்னும் விளையாடிக் கொண்டிருக்கிறார். சிறிய நாடுகளுக்கு எதிராக அவர் விளையாடாத போது, தினேஷ் கார்த்திக் கைகளில் கிளவுஸ்-ஐ கொடுத்தது பிசிசிஐ. இந்த வாய்ப்பை, 19 வயதில் தோனியால் அணியில் இருந்து காணாமல் போன தினேஷ் கார்த்திக், 33 வயதில் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார். குறிப்பாக, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற நிடாஹஸ் டிராபி முத்தரப்பு டி20 தொடரில், வங்கதேசத்திற்கு எதிராக இறுதிப் போட்டியில் தினேஷ் ஆடிய மேட்ச் வின்னிங் பெர்ஃபாமன்ஸ் என்றும் மறக்க முடியாத நிகழ்வாகும். வங்கதேசத்தின் பாம்பு டான்ஸில் இருந்து இந்தியாவை அப்போட்டியில் மீட்டார் தினேஷ் கார்த்திக்.

தொடர்ந்து ஐபிஎல்-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டன் பதவி, பிளே ஆஃப் வரை முன்னேற்றம் என ஏறு முகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறார் தினேஷ். இவரது சிறப்பான ஃபார்முக்கு கிடைத்த மற்றொரு பரிசாக, ஜுலை மாதம் தொடங்கவுள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. நிச்சயம், அந்த தொடரில், ஆடும் லெவனில் தினேஷுக்கு வாய்ப்பு கிடைக்கப்பெறும் என உறுதியாக நம்பலாம்.

இந்த நிலையில், தினேஷ் கார்த்திக் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “நான் அறிமுகமாகிய தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மேலும் தொடர்ச்சியாக என்னுடைய ஆட்டம் நன்றாக அமையவில்லை. அப்போது கடுமையான போட்டி நிலவியது. அந்த நேரத்தில் எம்எஸ் தோனி என்று அழைக்கப்பட்டவர் என்னுடைய கழுத்தை அழுத்தி மூச்சுவிட முடியாமல் செய்து விட்டார். அந்த நேரத்தில் உலகக் கிரிக்கெட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். அதன்பின் தோனி இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக மாறிவிட்டார்.

87 டெஸ்ட் போட்டி இடைவெளிக்குப்பின் இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளேன். நான் என்னுடைய இடத்தை ஒரு சாதாரண வீரரிடம் இழக்கவில்லை. தோனி என்ற ஜாம்பவானிடம் இழந்துள்ளேன். நான் அவருக்கு மதிப்பு அளிக்கிறேன். அந்த நேரத்தில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை நான் போதும் என்ற அளவிற்கு வெளிப்படுத்தவில்லை. தற்போது எனக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய சிறந்த ஆட்டத்தை இப்போது நிச்சயம் வெளிப்படுத்துவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ஒன்று மட்டும் உறுதி… தினேஷ் கார்த்திக் இடத்தை தோனி பறிக்கவில்லை… தோனியிடம் தனது இடத்தை தினேஷ் கார்த்திக் இழந்துவிட்டார். ஆனால், இப்போது காட்சிகள் மாறுகிறது. தோனி இன்றும் அதே ஃபார்மில் இருந்தாலும், தினேஷின் அபாரமான ஆட்டத்திறனால் மீண்டும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை தோனியுடன் ஒரே அணியில் இருந்து, அவருக்கு முன்பாகவே வெளிப்படுத்தும் போது, நிச்சயம் பழைய காயங்கள் தினேஷின் மனதில் இருந்து மறையும் என்பது உறுதி!. டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக், அடுத்த சில ஆண்டுகளுக்கு தோனியின் இடத்தை நிரப்புவார் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close