துபாயில் அடுத்த மாதத்தில் துவங்க உள்ள ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடும் பொருட்டு, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் தீவிர பயிற்சி மேற்கொள்ள உள்ளது.
ஐபிஎல் தொடர், இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அது தற்போது செப்டம்பர் மாதத்தில் துபாயில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்துவருவதால் பல்வேறு மாநிலங்களும் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வரும் நிலையில், விளையாட்டு மைதானங்களிலும், பார்வையாளர்கள் இன்றி போட்டிகளை நடத்தவும், வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்ற தேவையான நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளனர். சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி எடுத்துக்கொள்ளும் பொருட்டு தேவையான அனுமதி கோரி, அணி நிர்வாகம் மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இதற்கு அனுமதி கிடைக்கும்பட்சத்தில், மகேந்திர சிங் தோனி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், அம்பதி ராயுடு உள்ளிட்ட வீரர்கள், சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி எடுப்பர். இதற்காக அவர்கள் ஆகஸ்ட் 14ம் தேதி வாக்கில் சார்ட்டர்ட் விமானம் மூலம் சென்னை வர உள்ளனர். அவர்கள் சென்னை புறப்படுவதற்கு முன்னரே கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டும்.அதில் நெகட்டிவ் என்று முடிவு வரும்பட்சத்திலேயே அவர்கள் சென்னை வருவர்.
சென்னை வரும் அவர்கள், ஓட்டல், மைதானத்தை தவிர வேறு எங்கும் செல்ல அனுமதியில்லை. அதேபோல், அவர்கள் சென்னையில் இருக்கும்போது அவர்களுக்கு இரண்டு முறை கொரோனா சோதனை நடத்தப்படும். இதிலும் நெகட்டிவ் என்று முடிவு வந்தால் மட்டுமே, அவர்கள் 21ம் தேதி துபாய் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடருக்கு முன்னதாக வீரர்களுக்கு பயிற்சி தேவை என்பது தோனியின் விருப்பம் ஆகும். இதனை அணி நிர்வாகமும் ஏற்றுக்கொண்டுள்ளதால், சேப்பாக்கம் மைதானத்தில் வீரர்கள் தீவிர பயிற்சி எடுக்க உள்ளனர்.
கொரோனா ஊரடங்கிற்கு முன்னதாக, தோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி எடுத்தபோது பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால், ரசிகர்கள், மைதானத்திற்கு வெளியேயும், ஓட்டலுக்கு வெளியேயும் கூட வேண்டாம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம், ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil